போராடிய பெண்களை ஆட்டு மந்தைகளுடன் அடைத்து வைத்த காவல்துறை: வானதி சீனிவாசன்

1 mins read
70f6d798-c66d-471e-b0c6-a51222acb154
வானதி சீனிவாசன். - படம்: ஊடகம்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தில், முக்கிய குற்றவாளியைக் காப்பாற்ற திமுக அரசு முயற்சி செய்வதாக சந்தேகம் எழுந்துள்ளதாக கோவை தெற்குத் தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

மாணவிக்கு நேர்ந்த கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடிய பெண்களைக் காவல்துறை ஆட்டு மந்தைகளுடன் அடைத்து வைத்தது, திமுக அரசின் அதிகார ஆணவத்தையும் கொடூர மனப்பான்மையையும் காட்டுகிறது என்றும் அவர் அறிக்கை ஒன்றில் விமர்சித்துள்ளார்.

“மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்காக நீதி கேட்க, ஜனநாயக வழியில் ஆர்ப்பாட்டம் நடத்தக்கூட திமுக அரசு அனுமதி அளிப்பதில்லை.

“ஆர்ப்பாட்டம் நடத்த வருபர்களைக் காரை விட்டு இறங்குவதற்கு முன்பே கைது செய்தனர். துண்டு பிரசுரம் கொடுத்தால்கூட கைது செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது.

“இவ்வளவு அடக்குமுறையை ஏவிவிடும் அளவுக்கு திமுக அரசுக்கு ஏன் அச்சம் என்பது பொதுமக்களின் கேள்வி,” என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

மதுரையில் நீதிக்காக திரண்ட பாஜக மகளிர் அணியினரை காவல்துறையினர் கைது செய்து ஒரு மண்டபத்தில் தங்க வைத்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், அதே மண்டபத்தில் நூற்றுக்கணக்கான ஆடுகளும் அடைத்து வைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

“இது திமுக அரசின் கொடூர மனநிலையைப் படம்பிடித்துக் காட்டுகிறது. இதற்கு தமிழக மக்கள் சரியான நேரத்தில் தக்க பாடம் புகட்டுவார்கள்,” என வானதி சீனிவாசன் மேலும் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்