சென்னை: காந்தி பிறந்த நாளான புதன்கிழமை அன்று (அக்.2) வெறுப்பு அரசியலைக் கண்டித்தும் ராகுல் காந்தியை விமர்சிப்பதைக் கண்டித்தும் காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு முழுவதும் பாத யாத்திரை நடத்தப்படும் என்று காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்து இருந்தார்.
சென்னையில் ஜிம்கானா கிளப் காமராஜர் சிலையில் இருந்து செல்வப்பெருந்தகை தலைமையில் பாத யாத்திரை செல்ல முடிவு செய்திருந்தனர்.
அதன்படி புதன்கிழமை காலை 7 மணியில் இருந்து அந்த பகுதியில் காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டனர். அப்போது அங்கு வந்த காவல்துறையினர், அண்ணா சாலை வழியாக பாத யாத்திரை செல்ல அனுமதி இல்லை என்றனர்.
இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே சலசலப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, எம்.பி.க்கள் விஷ்ணு பிரசாத், சுதா, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் அங்கு வந்தனர்.
அவர்களிடம் காவல்துறை அதிகாரிகள் அனுமதி இல்லை என்றும் அதற்கு பதிலாக ரம்டா ஓட்டல் அருகே சென்று அங்கிருந்து புறப்படும்படியும் தெரிவித்தனர்.
இதை ஏற்க காங்கிரசார் மறுத்தனர். இதனால் காங்கிரசாருக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரம் அந்தப் பகுதி முழுவதும் பரபரப்பாகக் காணப்பட்டது.
காவல்துறை அனுமதி மறுத்தால் மறியலில் ஈடுபடவும் காங்கிரஸ் கட்சியினர் தயாரானார்கள். அதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
கடைசியில் ஒரு வழியாக மூன்று மூன்று பேராகச் செல்ல அனுமதித்தனர். காலை 9.30 மணியளவில் பாதயாத்திரை தொடங்கியது. அங்கிருந்து மே தினப் பூங்கா, சிந்தாதிரிப்பேட்டை, ரமடா ஹோட்டல், புதுப்பேட்டை லான்ஸ் கார்டன் வழியாக எழும்பூர் அருங்காட்சியகம் அருகே பாதயாத்திரை நிறைவடைந்தது.

