தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாலியல் புகார்: சீமானிடம் காவல்துறை விசாரணை

2 mins read
af206fd6-6e53-4044-84ca-6e54a1f1db34
சீமான். - படம்: ஊடகம்

சென்னை: திரைப்பட நடிகை விஜயலட்​சுமி அளித்துள்ள பாலியல் புகாரின் பேரில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்துள்ள சென்னை காவல்துறையினர், வெள்ளிக்கிழமை இரவு அவரிடம் விசாரணை நடத்தினர்.

சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இந்த விசாரணை நடந்தது. அங்கு ஏராளமான தொண்டர்களும் சீமான் ஆதரவாளர்களும் கூடியதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

முன்னதாக, அப்பகுதியில் உள்ள கடைகள் மூடப்பட்டன. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதால் வன்முறைச் சம்பவங்கள் ஏதும் நிகழவில்லை. விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான்,

அவமானப்படுத்தும் நோக்கத்துடன் தன் மீது பாலியல் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

ஆளும் திமுக அரசு தன் மீதான இந்த வழக்கைத் தேவையின்றி நீட்டித்துக்கொண்டே போவதாகக் குறிப்பிட்ட அவர், அந்த வழக்கில் காவல்துறைக்கு அழுத்தம் தரப்படுவதாகக் கூறினார்.

“நீதிமன்ற உத்தரவின்படி, இந்த வழக்கை விசாரித்து முடிக்க மூன்று மாதம் கால அவகாசம் உள்ளது. ஆனால், மூன்றே நாளில் இவ்வளவு விரைவாக காவல்துறை நடவடிக்கை செய்ய வேண்டிய அவசியம் என்ன?

“எனக்கான அழைப்பாணை கிடைத்தபோது, நான் பயணத்தில் இருப்பதாகக் கூறினேன். என் வீட்டு வாயில் கதவில் அழைப்பாணையை காவல்துறையினர் ஒட்டிச்சென்ற பிறகு அதை அங்கிருந்த ஒருவர் கிழித்தார்.

“அவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். அவரை அழைப்பாணையைக் கிழித்ததாகக் கூறி, கைது செய்துள்ளனர். தமிழக ஆட்சியாளர்களால் என்னைச் சமாளிக்க முடியவில்லை. அதனால்தான் இப்படியெல்லாம் நடந்துகொள்கிறார்கள்,” என்றார் சீமான்.

கடந்த பல ஆண்டுகளாக தன் மீதான வழக்கை பாலியல் வழக்கு என்று வகைப்படுத்தி, தனது நற்பெயருக்கு ஒருதரப்பினர் களங்கம் ஏற்படுத்தி வருவதாக அவர் சாடினார். விசாரணையின்போது வழக்கமான கேள்விகளே கேட்கப்பட்டதாகவும் சீமான் கூறினார்.

குறிப்புச் சொற்கள்