சென்னை: தமிழக காவல்துறையின் செயல்பாடுகள் ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் அவமானம் ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் சாடியுள்ளார்.
இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சென்னை, அண்ணா நகரில் 10 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உயர் நீதிமன்றம் மாற்றியுள்ளது. அதைத் தமிழக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இதன்மூலம் காவல்துறையின் தவறுகளுக்கு அரசும் துணை போகிறது என்றுதான் பொருளாகும்,” என்று அன்புமணி கூறியுள்ளார்.
“ஒரு காலத்தில் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு இணையாகத் தமிழ்நாட்டுக் காவல்துறை போற்றப்பட்டது. ஆனால், இப்போது நாளுக்கு நாள் சீரழிந்து வருவது கவலை தரக்கூடியதாக உள்ளது.
“கடலூர் மாவட்டத்தில் வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழியைக் கொலை செய்வோம் என்று அச்சுறுத்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள்மீது காவல்துறை இன்றுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
“பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுவதற்காகச் சென்ற பா.ம.க. மாவட்டச் செயலாளர் செல்வ மகேஷ் உள்ளிட்டோர்மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்திருக்கிறது. இதிலிருந்தே காவல்துறை எந்த அளவுக்கு ஆளும்கட்சிக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஆதரவாகச் செயல்படுகிறது. எதிர்க்கட்சிகளை எந்த அளவுக்குப் பழிவாங்குகிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்,” என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டுக் காவல்துறைக்கு எனச் சிறப்புகளும் பெருமைகளும் உள்ளன. அவற்றைப் பாதுகாக்கும் வகையில் காவல்துறை அதிகாரிகள் நடந்துகொள்ள வேண்டும். அதேநேரத்தில் காவல்துறையைக் கட்டுப்படுத்தாமல் சுதந்திரமாகச் செயல்படுவதற்கு தமிழக அரசும் அனுமதிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

