திருமங்கலம்: காவல் நிலையத்தில் விவாகரத்து புகாரில் பறிமுதல் செய்த நகையை மோசடி செய்த பெண் காவல்துறை ஆய்வாளர் (இன்ஸ்பெக்டர்) கீதா கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியிலாளர் ராஜேஷும் அவரது மனைவி அபிநயாவும் திருமணம் ஆன இரண்டு மாதங்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
கடந்த ஏப்ரலில் விவாகரத்து கோரி அபிநயா புகார் அளித்தார். தான் அணிந்து வந்த 102 சவரன் நகைகளை மீட்டு தரக் கோரி ஆய்வாளர் கீதாவிடம் அபிநயா தெரிவித்தார். அபிநயா புகாரின்பேரில், ராஜேஷ் குமாரிடமிருந்து 102 சவரன் தங்க நகையை ஏப்ரல் மாதமே கீதா கைப்பற்றினார்.
இதையடுத்து ராஜேஷ் தன்னிடம் இருந்த 95 பவுன் நகைகளையும் இன்ஸ்பெக்டர் கீதாவிடம், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே கொடுத்துள்ளார். ஆனால், அந்த நகைகளை அபிநயாவிடம் கொடுக்காமல், வேண்டுமென்றே இன்ஸ்பெக்டர் கீதா காலம் தாழ்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
நகைகளை அபிநயாவிடம் ஒப்படைக்காதது குறித்து ராஜேஷ் குமார் மதுரை டி.ஐ.ஜி ரம்யா பாரதியிடம் புகார் அளித்தார். டி.ஐ.ஜி.யிடம் புகார் அளித்தார். விசாரணையில் இன்ஸ்பெக்டர் கீதா அந்த நகைகளை தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.43 லட்சத்திற்கு அடகு வைத்திருந்தது தெரிய வந்தது. நகையை திருப்பி தருவதற்கு இன்ஸ்பெக்டர் கீதா கால அவகாசம் கேட்டிருந்தார்.
சில நாட்களுக்கு முன்பு 70 சவரன் தங்க நகைகளை அபிநயாவிடம் ஆய்வாளர் கீதா ஒப்படைத்தார். எஞ்சிய 32 சவரன் தங்க நகைகளை ஒப்படைக்காமல் இருந்ததை அடுத்து ஆய்வாளர் கீதா கைது செய்யப்பட்டார்.