சென்னை: தமிழக காவல்துறையினருக்கு ஜனநாயக உணர்வு என்பது அறவே இல்லை எனத் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றஞ்சாட்டி உள்ளார்.
காவல்துறையினர் சீருடையில் இருக்கும்போது, சர்வாதிகாரிகளைப்போல் நடந்துகொள்வது வாடிக்கையாகிவிட்டதாக அவர் விமர்சித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் தகவல் அறியும் உரிமை அணி நிர்வாகி அப்ரோஸ் என்பவர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இது கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சமூக ஊடகப் பதிவுகள் சிலவற்றைப் பார்த்த பிறகு, அப்ரோஸ் மக்களுக்கான போராட்டத்தில்தான் ஈடுபட்டார் என்றும் சட்டத்திற்குப் புறம்பாக எதையும் செய்யவில்லை என்றும் குறிப்பிட்டு நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியது.
ஆனால், இந்த வழக்கில் இருந்து வெளிவருவதற்குள் அப்ரோஸ் மீது மேலும் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு மீண்டும் குண்டர் சட்டத்தில் கைதானார்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, “எதை வேண்டுமானாலும் செய்யலாம், முதல்வர் ஸ்டாலினிடம் நியாயப்படுத்தலாம் எனும் ஆணவப்போக்கு காவல்துறையிடம் காணப்படுகிறது.
“பல வழக்குகளில் காவல்துறையினரும் ஏடாகூடமாகச் சிக்குகிறார்கள். திருப்புவனம் அஜித்குமார் உள்ளிட்ட பலரை காவல்நிலையத்தில் அடித்தே கொன்றுள்ளனர். அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்திருக்க வேண்டாமா?
“காவல் நிலையம், நீதி வழங்கும் இடம். ஓர் அப்பாவி நம்பிக்கையுடன் செல்லும் இடம். நம்பி வந்தவர்களைக் கொலை செய்து அனுப்புவது என்றால், அது என்ன கசாப்புக் கடையா?,” என்று அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
அப்ரோஸ் கைதாகி இருப்பது, காங்கிரசாரின் மானப் பிரச்சினை எனக் குறிப்பிட்டுள்ள அவர், துப்பாக்கிகள், கைத்தடிகளை அப்பாவிகளுக்கு எதிராக தொடர்ந்து பயன்படுத்த முயற்சி செய்தால், அவற்றைத் தகர்த்து எறிவதைத் தவிர வேறு வழியில்லை,” எனக் கூறினார்.