திருச்சி: கடந்த 27 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த ரயில் குண்டு வெடிப்புச் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளி நீதிமன்றத்தில் முன்னிலையாக திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கான நோட்டீசை கோவை காவல்துறையினர் குற்றவாளி அஷ்ரஃப் அலி வீட்டில் ஒட்டினர்.
கடந்த 1997ஆம் ஆண்டு கோவையின் பல்வேறு பகுதிகளில் குண்டுகள் வெடித்தன.
கோவை, திருச்சூர், ஈரோடு ரயில் நிலையங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இந்த வழக்குகளில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அஷ்ரஃப் அலி, முக்கியக் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து அவர் தலைமறைவானார். எனினும், விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில், வரும் 17ஆம் தேதியன்று, திருச்சி நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகி, அஷ்ரஃப் அலி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் இல்லையெனில் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்படுவார் என்றும் திருச்சி நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, இந்த உத்தரவு நோட்டீசை கோவை கல்லாமேடு பகுதியில் உள்ள அஷ்ரஃப் அலி வீட்டில், காவல்துறையும் தீவிரவாதத் தடுப்புப் பிரிவினரும் வெள்ளிக்கிழமையன்று நேரில் சென்று ஒட்டினர்.


