முற்றுகைப் போராட்ட அறிவிப்பால் சீமான் வீட்டுக்கு காவல்துறை பாதுகாப்பு

1 mins read
3945fea7-d9b7-47b3-9f70-d5fab84409b2
நாம் தமி­ழர் கட்­சி­யின் ஒருங்­கி­ணைப்­ பா­ள­ர் சீமான். - படம்: த இந்து

சென்னை: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டை முற்றுகையிடப்போவதாக பெரியார் ஆதரவு அமைப்புகள் அறிவித்திருப்பதை அடுத்து, அவரது வீட்டுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கடந்த சில நாள்களாக பெரியார் குறித்து சீமான் தெரிவித்து வரும் பல்வேறு கருத்துகளுக்கு திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் பெரியார் ஆதரவு அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

மறுபக்கம் பாஜக ஆதரவு தெரிவித்து வருகிறது. தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சீமான் வீட்டை முற்றுகையிட முயன்றபோது காவல்துறை தடுத்து நிறுத்தியது.

அச்சமயம் நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவரது கார் கண்ணாடி கல்வீசி உடைக்கப்பட்டது. இது தொடர்பாக மூன்று பெண்கள் உட்பட 24 பேர் கைதாகினர்.

இந்நிலையில், சீமானுக்கு எதிராக மாநிலம் தழுவிய அளவில் பல்வேறு போராட்டங்களை நடத்திட பெரியார் ஆதரவு அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.

இதற்கு சமூக ஊடகங்கள் மூலமாக ஒருங்கிணைப்புப் பணிகள் நடந்து வருவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், வரும் 22ஆம் தேதியன்று சீமான் வீட்டை முற்றுகையிட இருப்பதாக மேற்குறிப்பிட்ட அமைப்புகள் அறிவித்துள்ளன.

இதையடுத்து, சென்னை நீலாங்கரை பகுதியில் உள்ள சீமான் வீட்டுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்