சென்னை: நடிகர் விஜய், தனது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து அவரது ரசிகர்களும் கட்சி தொண்டர்களும் இன்னும் பரபரப்பாக இயங்க துவங்கி உள்ளனர்.
வருகின்ற சட்டமன்றத் தேர்தலை இலக்காக கொண்டு தேர்தல் களத்தில் இறங்கி உள்ளார்.
கட்சியின் முதல் மாநாட்டை செப்டம்பர் மாதம் நடத்த திட்டமிட்டுள்ள நடிகர் விஜய், சென்னை பனையூர் அலுவலகத்தில் கடந்த 22ஆம் தேதி கட்சியின் கொடி, சின்னம், கொடிப் பாடலை விஜய் வெளியிட்டார்.
வாகை மலர் நடுவே அமைந்திருக்க இருபுறமும் யானைகள் சீறிப்பாயும் வகையில் அமைக்கப்பட்டு இருந்த கொடி அறிமுகப்படுத்தப்பட்ட அடுத்த சில மணிநேரங்களில் அதற்கு பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டது. இது தங்கள் கட்சியின் சின்னம், இது தங்கள் கட்சியின் நிறம், இது ஸ்பெயின் நாட்டு கொடியின் நிறம் என அடுத்தடுத்து விமர்சிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
கொடிக்கான விளக்கம் குறித்து நடக்கவிருக்கும் மாநாட்டில் தெளிவுபடுத்த இருப்பதாகவும் அதுவரை தன்னுடைய கட்சியினர் கொடியை ஏற்றி வைத்து கொண்டாடுமாறு தெரிவித்திருந்தார்.
அதையடுத்து தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் கட்சி கொடியை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஏற்றி வருகின்றனர்.
சில இடங்களில் கட்சியினர் அனுமதி இல்லாமல் கொடியேற்றியதாக காவல்துறையினருக்கும் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மதுரை கோரிப்பாளையத்தில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் 50 அடி உயர கொடிக்கம்பம் நடுவதற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சியின் தடையில்லா சான்றிதழை இணைக்காததால் அனுமதி ரத்து என காவல்துறை தரப்பில் விளக்கம் அளித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
புகார்களைத் தொடர்ந்து அனுமதியின்றி எங்கும் கொடியேற்றக் கூடாது என்று தொண்டர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் விதிகளை மீறி கொடிக்கம்பங்கள் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.