சேலம்: திரைப்படங்களில் இடம்பெறும் நகைச்சுவைக் காட்சியைப்போல் கைப்பேசி கோபுரம் ஒன்று மாயமாகிவிட்டதாக சேலம் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் கைப்பேசி சேவைகளை வழங்கி வந்த ஏர்செல் நிறுவனம் கடந்த 2018ஆம் ஆண்டு மூடப்பட்டது. முன்னதாக, சேலம் மாவட்டம் இருமாபாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் அந்த நிறுவனத்துக்காக 75 அடி உயர கைப்பேசி கோபுரம் அமைக்கப்பட்டது.
எனினும் ஏர்செல் நிறுவனம் மூடப்பட்டதால் அந்த வீட்டின் உரிமையாளருக்கு கைப்பேசி கோபுரத்துக்கான வாடகைத்தொகை வந்து சேரவில்லை.
இந்நிலையில், ஏர்செல் நிறுவனம் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அமைத்த கைப்பேசி கோபுரங்கள் மாயமாகி வருவதாக வெளியான தகவலை அடுத்து சேலம் இருமாபாளையம் பகுதியில் உள்ள கைப்பேசி கோபுரத்தை பார்வையிட ஏர்செல் நிறுவனத்தின் அதிகாரி நேரில் சென்றுள்ளார். அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
ரூ.17.74 லட்சம் செலவில் அங்கு அமைக்கப்பட்ட 75 அடி உயர கைப்பேசி கோபுரம் அங்கு இருந்ததற்கான தடமே தெரியாத வகையில் முற்றிலும் மாயமாகி இருந்தது.
அவர் வீட்டு உரிமையாளர், அண்டை வீட்டாரிடம் விசாரித்தபோது சில ஆண்டுகளுக்கு முன்பு சிலர் கைப்பேசி கோபுரத்தின் பாகங்களைப் பிரித்து லாரியில் எடுத்துச்சென்றதாகக் கூறியுள்ளனர்.
யார் என்பது தெரியாத நிலையில், ஏர்செல் நிறுவனம் மூடப்பட்டதால் அதன் ஊழியர்கள்தான் இவ்வாறு எடுத்துச் சென்றதாக பொதுமக்கள் கருதியுள்ளனர்.
இதையடுத்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. திருடியது யார், எப்போது திருடினர் என்பது தெரியாத நிலையில், காவல்துறை இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது.