சென்னை: மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பும் பெண் காவலர்கள் மூன்று ஆண்டுகளுக்கு சொந்த ஊரில் பணியில் அமர்த்தப்படுவர் என்று தமிழக அரசு கூறியுள்ளது.
சென்னையில் காவல்துறையினருக்கு குடியரசுத் தலைவர் பதக்கங்கள், முதலமைச்சர் பதக்கங்கள், மத்திய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் ஆகியவை வழங்கும் விழா திங்கட்கிழமை நடைபெற்றது.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் திடலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறையினருக்கு பதக்கங்களை வழங்கிச் சிறப்பித்தார்.
அந்த விழாவில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்களுக்கு ஓராண்டு மகப்பேறு விடுமுறை அளிக்கப்படுகிறது.
மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பும் பெண் காவலர்கள் அவர்களின் குழந்தைகளை பராமரிப்பதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவது தொடர்பாக கோரிக்கைகள் வைத்து வந்தனர்.
பெண் காவலர்களின் கோரிக்கையை ஏற்று மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பும் காவலர்களுக்குப் பணி மூப்பிற்கு விலக்கு அளித்து அவர்களின் பெற்றோரோ அவரது கணவர் வீட்டை சார்ந்தவர்களோ வசிக்கும் சொந்த ஊர் பகுதிகளிலேயே அடுத்த மூன்று ஆண்டுகளுக்குப் பணி வழங்க அரசு முடிவு செய்துள்ளது என்று கூறினார்.

