சென்னை: தமிழகம் முழுவதும் பாலியல் புகார்களில் சிக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், புதிய ஆசிரியர்கள் நியமனத்துக்கு காவல்துறை சரிபார்ப்புச் சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும், போக்சோ வழக்கில் தண்டனை பெற்ற ஆசிரியர்களின் சான்றிதழ் ரத்து செய்யப்படும் எனத் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் அறிவித்துள்ளார்.
சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழாமல் தடுக்க, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக சென்னையில் உள்ள அரசுத் தலைமைச் செயலகத்தில் திங்கட்கிழமை உயர்நிலை ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
தலைமைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பள்ளிப் பணியாளர்கள் அனைவரும் குழந்தை பாதுகாப்பு உறுதிமொழி ஆவணத்தில் கையெழுத்திடுவது கட்டாயமாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவிகள் பயணம் செய்யும் பள்ளி வாகனங்களில் பெண் உதவியாளர்கள் பணியமர்த்தப்பட வேண்டும். இருபாலர்கள், பெண்கள் பள்ளிகளில் உடற்கல்வி பணியிடங்களில் ஆசிரியைகள் நியமிக்க்கப்பட வேண்டும்.
விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், கல்விச் சுற்றுலா ஆகியவற்றுக்கு மாணவிகளை ஆசிரியைகள்தான் அழைத்துச் செல்ல வேண்டும். கல்வி நிறுவனங்களுக்கு வெளியே முகாம்களில் தங்கும் பட்சத்தில் மாணவிகளுடன் ஆசிரியைகள் மட்டுமே தங்குவது உறுதி செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் இந்தக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன.
அனைத்துப் பரிந்துரைகளையும் அரசு, தனியார் பள்ளிகள், உயர் கல்வி நிறுவனங்கள் கண்டிப்பாக பின்பற்றுவதைச் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் 1,098 மற்றும் 14,417 ஆகிய உதவி எண்கள் அடங்கிய விழிப்புணர்வுப் பதாகைகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் அனைத்துப் பள்ளிகளிலும் ‘மாணவர் மனசு புகார் பெட்டி’ மற்றும் முக்கியான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு மேலும் அறிவுறுத்தி உள்ளது.

