ராணிப்பேட்டை: திருடன் திருடிய நகைகளை வேலூர் மத்திய சிறைக் காவலர்கள் இருவர் அடகு வைத்தது கண்டுபிடிக்கப்பட்டதால் மூவரும் கைதானார்கள்.
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ், 73. இவர் டிசம்பர் 4ஆம் தேதி சென்னைக்கு சென்றிருந்தார். அப்போது அவரது வீட்டிலிருந்த 11 சவரன் நகை, 1,250 கிராம் வெள்ளி திருட்டு போனது. இதைப்போல் பனப்பாக்கம் அடுத்த ரெட்டிவலம் கிராமத்தைச் சேர்ந்த வெங்காய வியாபாரி சுரேஷ், 44, வெளியூர் சென்றிருந்தபோது அவரது வீட்டில் இருந்தும் 23 கிராம் தங்கம், 416 கிராம் வெள்ளி மற்றும் 1.50 லட்சம் ரூபாய் ரொக்கம் திருட்டு போனது.
இதுகுறித்து நெமிலி காவலர்கள் விசாரித்து, சம்பவத்தில் ஈடுபட்ட காவேரிப்பாக்கம் அடுத்த மாமண்டூரைச் சேர்ந்த சூர்யா, 29, என்பவரைக் கைது செய்தனர்.
விசாரணையில், குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட சூர்யாவுக்கும் சிறைக் காவலர்கள் பாஸ்கரன், 29, அப்துல் சலாம், 28, ஆகியோருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பிணையில் வெளிவந்த சூர்யா, நகையைத் திருடி பாஸ்கரன், அப்துல் சலாம் ஆகியோரிடம் கொடுத்ததும் அவற்றை காவலர்கள் இருவரும் திருவண்ணாமலையில் உள்ள தனியார் அடகுக் கடையில் அடகு வைத்ததும் தெரிய வந்தது.
தொடர்ந்து, இரண்டு சிறைக் காவலர்களுடன் சூர்யாவையும் கைது செய்து, இரு இடங்களிலும் திருடப்பட்ட நகை, பணத்தைக் காவலர்கள் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட காவலர்கள் இருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

