போதை அதிகமானால் வாடகை காரில் வீட்டுக்கு அனுப்பும் காவல்துறை

1 mins read
1c3c9039-46c4-486a-810a-1d17631090dc
தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனை மாதந்தோறும் அதிகரித்து வருகிறது. - கோப்புப்படம்: ஊடகம்

கோவை: மது அருந்தி, போதையில் தள்ளாடுபவர்களை வாடகைக் காரில் வீட்டுக்கு அனுப்ப கோவை காவல்துறை முடிவு செய்துள்ளது. இத்தகைய நடவடிக்கை சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட உதவும் எனக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனை மாதந்தோறும் அதிகரித்து வருகிறது.

மரு அருந்திவிட்டு வாகனங்களை இயக்குபவர்களால் விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை போதையில் வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில், 373 பேர் உயிரிழந்துவிட்டனர்.

கோவையிலும் இத்தகைய விபத்துகள் அடிக்கடி நிகழ்வதால் அண்மையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலைப் பாதுகாப்புக்குழுக் கூட்டம் நடந்தது.

அப்போது மது போதையில் வாகனங்களில் செல்வோரைக் கண்டறிந்து, அவர்களைப் பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பி வைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதன் முடிவில், மது அருந்தியவர்கள் டாஸ்மாக் மதுக் கடைகளில் இருந்து வெளியேறியது முதல் கண்காணிப்பது என்றும் தொடக்கத்திலேயே போதையில் தள்ளாடுபவர்களை அடையாளம் காண்பது என்றும் முடிவானது.

இதற்காக, அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளிலும் கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்தி, அவற்றை காவல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்க காவல்துறை முடிவு செய்துள்ளது.

அதன் பின்னர் அதிக மது போதையில் இருப்பவர்களைக் கண்டறிந்து அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்து, வாடகைக் காரில் வீடுகளுக்கு அனுப்பி வைப்பது எனத் திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவரது ஒப்புதல் கிடைத்த பின்னர் செயல்பாட்டுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்