சென்னை: தமிழகத்தில் ஃபெங்கல் புயலால் ஏற்பட்ட பெருமழையை அடுத்து, மாநிலத்தின் பல மாவட்டங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக ரூ.2,000 வழங்கப்படும் என்று அண்மையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அந்த அறிவிப்புக்கு தமிழ் நாட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மிக்ஜாம் புயலின்போது ரூ.6,000 இழப்பீடு வழங்கப்பட்டது. இப்போது அதைவிட மோசமான பாதிப்புகளைச் சந்தித்துள்ள விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு ரூ.2,000 போதுமானதாக இருக்காது என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
“இழப்பீட்டுத் தொகையாக குடும்பத்திற்கு ரூ.2,000 மட்டும் வழங்கப்படும் என்ற அறிவிப்பு அநீதியானது. இழப்பீட்டுத் தொகையாக குடும்பத்திற்கு ரூ.10,000 வழங்க வேண்டும். அத்துடன் நெற்பயிர்களைப் பறிகொடுத்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க வேண்டும்,” என்று திரு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துரை.ரவிக்குமார், விழுப்புரம் மாவட்டத்தின் 19 மீனவச் சிற்றூர்களைச் சேர்ந்தவர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரான இரா.முத்தரசன், உற்றாரைப் பறிகொடுத்த குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்றும் விவசாயப் பாதிப்புகளுக்கு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ.25,000 வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
“எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, உயிரிழந்தவர்களுக்கு ரூ.25 லட்சம், நெற்பயிருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியவர்தான் முதல்வர் ஸ்டாலின். இப்போது அவர், இழப்பீட்டுத் தொகையாக இவ்வளவு குறைந்த தொகையை அறிவித்துள்ளார். எனவே, அவர் அறிவித்துள்ள நிவாரணத் தொகையை நான்கு மடங்காக உயர்த்தி அறிவிக்க வேண்டும்,” என்று வலியுறுத்தியுள்ளார் முன்னாள் முதல்வர் ஓ.பி. பன்னீர்செல்வம்.
இந்நிலையில், கனமழை மற்றும் வெள்ள பாதிப்பால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் வாழ்வாதாரம் பாதித்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ 2,000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
தொடர்புடைய செய்திகள்
இப்போது, மழை, வெள்ளத்தில் உயிரிழந்த கால்நடைகளுக்கான இழப்பீடுகளை அறிவித்துள்ளார். செம்மறி ஆட்டுக்கு ரூ.4 ஆயிரம், கோழிக்கு ரூ.100, எருது, பசு ஆகியவற்றுக்கான இழப்பீடு ரூ.37,500 என தமிழக அரசு அறிவித்துள்ளது.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் முழு வீச்சில் நிவாரணப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வெள்ள நிவாரணம் ரூ.2,000 வழங்குவதற்கான டோக்கன் இன்று முதல் விநியோகம் செய்யப்படும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மை செயலாளர் அமுதா தெரிவித்துள்ளார்.

