மதுரை: சிலைக் கடத்தல் மன்னர் எனக் கூறப்படும் தீனதயாளனுக்கு உதவியதாக இந்திய மத்தியப் புனலாய்வுப் பிரிவு (சிபிஐ) வழக்கு தொடர்ந்தது.
அதன் தொடர்பில் ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கை வழங்க முன்னாள் காவல்துறை ஐஜி பொன்மாணிக்கவேல் தாக்கல் செய்த மனுவிற்குப் பதிலளிக்குமாறு மத்தியப் புலனாய்வுப் பிரிவுக்குக் கடிதம் அனுப்ப உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகக் காவல்துறையில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக திரு பொன் மாணிக்கவேல் பணிபுரிந்தார். 2018ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற அவர், சென்னையின் ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த அனைத்துலக அளவில் சிலை கடத்தல்காரராகச் செயல்பட்டதாகக் கருதப்படும் தீனதயாளனைக் கைது செய்தார்.
அந்த விவகாரத்தில் சில காவல்துறை அதிகாரிகளும் கைதுசெய்யப்பட்டதாகத் தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. திரு பொன் மாணிக்கவேல், தீனதயாளனுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகவும் அதன் காரணமாகவே தாங்கள் கைதுசெய்யப்பட்டதாகவும் அந்தக் காவல்துறை அதிகாரிகளில் ஒருவர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அவர் திரு பொன் மாணிக்கவேல் மீது வழக்குப் பதுவு செய்தார்.
அதனைத் தொடர்ந்து திரு பொன் மாணிக்கவேல் தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விவரங்களை அறிய மத்தியப் புலனாய்வுப் பிரிவின் ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கையைப் பெற கோரிக்கை விடுத்தார். அதனையடுத்து உயர்நீதிமன்றம் மத்தியப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது.

