சூரப்பட்டில் ரூ.146 கோடியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

1 mins read
df9e6867-2e03-482c-87d4-241fb8b02758
கோப்புப் படம் - பிக்சாபே

சென்னை: சென்னை மாதவரத்தை அடுத்துள்ள சூரப்பட்டு பகுதியில் ரூ.146.62 கோடியில் நாளொன்றுக்கு 47 மில்லியன் லிட்டர் குடிநீரைச் சுத்திகரிக்கும் நிலையத்தை அமைக்க சென்னை குடிநீர் வாரியத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

59 ஆண்டுகள் பழமையான இந்த நிலையத்தில் தற்போது தினமும் 7 மில்லியன் லிட்டர் குடிநீர் மட்டும் சுத்திகரிக்கப்படுகிறது.

இங்கு சுத்திகரிக்கப்படும் நீர், ஆவடி கனரக வாகனத் தொழிற்சாலை பகுதியில் உள்ள 12 குடியிருப்புப் பகுதிகளுக்கும், சூரப்பட்டு, சண்முகாபுரம் பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு வந்தது.

இந்தச் சூழலில், இந்தப் பழைய கட்டமைப்பை இடித்துவிட்டு, நாளொன்றுக்கு 47 மில்லியன் லிட்டர் குடிநீரைச் சுத்திகரிக்கும் நிலையத்தை அமைக்கவும், இந்த நிலையத்துக்கு புழல் ஏரியிலிருந்து தினமும் 52 மில்லியன் லிட்டர் நீரைக் கொண்டு வரும் கட்டமைப்பை ஏற்படுத்தவும் சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டிருந்தது.

அதன்படி, 47 மில்லியன் லிட்டர் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ரூ.81.95 கோடியில் அமைப்பது, புழல் ஏரியிலிருந்து நாளொன்றுக்கு 52 மில்லியன் லிட்டர் குடிநீரை எடுக்கும் கட்டமைப்பை ரூ.12.04 கோடியில் அமைப்பது, இந்தக் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை 10 ஆண்டுகளுக்கு ரூ.52.63 கோடி செலவில் பராமரிப்பது என மொத்தம் ரூ.146.62 கோடிக்குத் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டது.

அதன்படி, தமிழக அரசு இத்திட்டத்தைச் செயல்படுத்த அனுமதி வழங்கி அரசாணை பிறப்பித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்