ஊழியர்களை விமானத்தில் அழைத்துச் சென்று இன்பத்தில் ஆழ்த்திய முதலாளி

ஊழியர்களை விமானத்தில் அழைத்துச் சென்று இன்பத்தில் ஆழ்த்திய முதலாளி

1 mins read
c2bd86d9-7e8a-457e-8a79-d2ae77c65217
கொச்சி முதல் சேலம்வரை விமானத்தில் பறந்த ஊழியர்களும் அவரின் குடும்பத்தினரும். - படம்: இந்தியன் எக்ஸ்பிரஸ்
multi-img1 of 2

கோவை: தன் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள், அவர்களின் பிள்ளைகள் என 25க்கும் மேற்பட்டோரை விமானத்தில் அழைத்துச் சென்று, மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் தமிழகத்தின் கோவை மாநகரைச் சேர்ந்த முதலாளி ஒருவர்.

அங்குள்ள பேரூர் பகுதியில் ‘பிரியா உணவு கேட்டரிங்’ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார் திரு லட்சுமி ராஜன். அவருடைய மகன் திரு பிரகாஷ் ராஜ்.

தன் மகன் ஆறு வயதுச் சிறுவனாக இருந்தபோது, “நீ பெரியவனாகி, எங்களுக்கெல்லாம் என்ன செய்யப் போகிறாய்?” என எதார்த்தமாகக் கேட்டார் திரு லட்சுமி ராஜன். அதற்கு, “உங்களையெல்லாம் ஒருநாள் விமானத்தில் அழைத்துச் செல்வேன்,” என்று திரு பிரகாஷ் ராஜ் பதில் சொன்னாராம்.

சிறுவயதில் சொன்னதை இன்றும் நினைவில் வைத்திருந்து, 35 ஆண்டுகளுக்குப் பிறகு சொன்னதைச் செய்துகாட்டியுள்ளார் திரு பிரகாஷ் ராஜ்.

தொழிலாளர்களையும் உறவினர்போல் நினைக்கும் அவர், தம் தந்தை காலத்திலிருந்து பணிபுரிந்துவரும் 75 வயது சரோஜினி உட்பட சிறியவர்கள், பெரியவர்கள் என 25 பேருக்கும் மேற்பட்டோரை விமானத்தில் அழைத்துச் சென்றார்.

கேரள மாநிலம் கொச்சியிலிருந்து தமிழகத்தின் சேலம்வரை அவர்கள் விமானத்தில் பறந்தனர். அத்துடன், கேரளத்தின் ஆலப்புழாவிலும் ஒருநாள் படகு உலா செல்ல வைத்து, தம் நிறுவன ஊழியர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார் திரு பிரகாஷ் ராஜ்.

ஊழியர்களையும் தம் குடும்பத்தினர்போல் நடத்தும் திரு பிரகாஷ் ராஜைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்