சென்னை: அடுத்து வரும் நாள்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.
தமிழகத்தில் 25 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று நாள்களுக்கு மழை புரட்டி போடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை காலகட்டத்தில் நல்ல மழைப்பொழிவும் இருக்கும். சிலமுறை பெருமழை பெய்து பாதிப்புகளையும் ஏற்படுத்தும்
தற்போது அரபிக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புயல் சின்னமாக வலுவடைந்து வருகிறது.
அதேசமயம், வங்கக் கடலில் அந்தமான் தீவுகளுக்கு தெற்கில் புதிய காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகும் வாய்ப்பும் உள்ளது. அதனால் அடுத்த மூன்று நாள்களில் தமிழகத்தில் கனமழை பெய்யும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஏரிகளில் உள்ள நீரை வெளியேற்றும் பணியை தீவிரப்படுத்த சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
அனைத்துப் பகுதிகளிலும் 10 சென்டிமீட்டருக்குக் குறையாமல் மழை பெய்யும். சில இடங்களில் 20 செ.மீ. வரை மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அன்றாடம் நீர்நிலைகளை தொடர்ந்து கண்காணித்து, அரசுக்கு அறிக்கை தருவதற்கு வசதியாக, சில நடவடிக்கைகளை நீர்வளத்துறை எடுத்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அதன்படி, வடகிழக்குப் பருவமழை முடியும் வரை அவசர காரணங்களைத் தவிர, நீர்வளத் துறையினர் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தற்போது பணிபுரியும் மாவட்டங்களைவிட்டு, மற்ற மாவட்டங்களுக்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
நீர்நிலைகளுக்கு வரும் நீர்வரத்து, வெளியேற்றும் நீர் விவரங்களை, ஒரு நாளைக்கு நான்கு முறை, முதல்வர், தலைமை செயலர் உள்ளிட்டோருக்கு அனுப்பி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
எங்கு மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது, எங்கு மின்தடை ஏற்பட்டுள்ளது என்ற விவரங்களை கண்காணிக்கும் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில், 24 மணி நேரமும் அதிகாரிகள் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக இருப்பதாக தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
“பேரிடர் எச்சரிக்கைகளை முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள TN-Alert செயலி தயார் நிலையில் இருக்கிறது. அதேபோல், மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கான என்டிஆர்எஃப்- பிரிவினரும் தயார் நிலையில் உள்ளனர். எந்தப் பகுதிகள் பாதிக்கப்படும் என்று கணிக்கப்படுகிறதோ, அங்கு தேசிய பேரிடர் மீர்புப் படையினரை முன்கூட்டியே அனுப்பவிருக்கிறோம்
“:சென்னையில் 10,000 பேரும், தமிழகம் முழுதும் 65,000 தன்னார்வலர்களும், மீட்புப் பணிகளில் ஈடுபடத் தயாராகவுள்ளனர்,” என்று அவர் கூறினார்.
மழையால் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி பாதிப்பு
விருதுநகர் மாவட்ட சுற்றுப்பகுதிகளில், 1,080 பட்டாசு ஆலைகள் உள்ளன. தீபாவளிக்கு குறைந்த நாள்களே இருக்கும் நிலையில், இப்பகுதியில் பட்டாசு உற்பத்திப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், மழை விட்டு விட்டுப் பெய்வதால் காற்றில் ஈரப்பதம் அதிகரித்திருப்பதால் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டு இருப்பதாக பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.