வேலூர்: தமிழ்நாட்டின் காட்பாடி பகுதி அருகே ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணி பெண்ணான ரேவதி தள்ளிவிடப்பட்டார். அதனால் அவர் கருவில் இருந்த 4 மாத சிசு இறந்தது.
இந்நிலையில், சிசுவை பாதுகாப்புடன் அகற்ற மருத்துவர்கள் நடவடிக்கை எடுத்தனர்.
ஆந்திராவைச் சேர்ந்தவர் ஜெமினி (41). இவரது மனைவி ரேவதி (36). இருவரும் திருப்பூரில் வேலை செய்து வருகின்றனர்.
ரேவதி மருத்துவப் பரிசோதனைக்காக தனது தாயார் வீடான சித்தூர் மாவட்டத்துக்கு செல்வதற்காக பிப்ரவரி 6ஆம் தேதி காலை கோவையில் இருந்து திருப்பதி வரை செல்லும் ‘இன்டர்சிட்டி’ விரைவு ரயிலில் பொது வகுப்பு பெட்டியில் புறப்பட்டார்.
12 மணியளவில் ரேவதியிடம் அதே பெட்டியில் இருந்த ஆண் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தார். தப்பிக்க முயன்ற ரேவதியை தாக்கி, ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளினார் ஆடவர்.
படுகாயம் அடைந்த ரேவதி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார். பின்னர் ரேவதியை தாக்கிய வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹேமராஜ் (30) என்பவரை அதிகாரிகள் கைது செய்தனர்.
ரேவதியின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். மேலும் ரேவதிக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் வழங்கிடவும் உத்தரவிட்டார்.
தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரேவதியின் முழு மருத்துவச் செலவையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
பாதிக்கப்பட்ட ரேவதிக்கு ரூ.50,000 கருணைத் தொகை வழங்கியுள்ளது தெற்கு ரயில்வே நிர்வாகம்.
ரயில்களில் பெண்கள் பெட்டியில் தனி ஒரு பெண் பயணித்தால் காவலர் உடன் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளதாக ரயில்வே எஸ்பி ஈஸ்வரன் தெரிவித்தார்.