திருவண்ணாமலை: இரண்டு ஆண்டுகளுக்கு முன் தங்கள் கட்சிக்கு ஒரு எம்.பி. சீட் தருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்ட ஒப்பந்தப் பத்திரத்தை ஆதாரபூர்வமாக வெளியிட்டு அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.
தேமுதிகவை ‘அரை விழுக்காட்டு கட்சி’ என இபிஎஸ் விமர்சித்ததைத் தொடர்ந்து, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா, 2024 மக்களவைத் தேர்தலின்போது போடப்பட்ட தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தை வெளியிட்டார்.
ஒப்பந்தத்தில் இருப்பது என்ன?
அதில், தேமுதிகவுக்கு ஐந்து மக்களவைத் தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டு, அதில் நானும் எடப்பாடி பழனிசாமியும் கையெழுத்திட்டு இருக்கிறோம்.
இதுகுறித்து பிரேமலதா கூறுகையில், “உங்களுக்கு மாநிலங்களவைக்கான இடம் தருவதாக எப்போது சொன்னேன் என எடப்பாடி பழனிசாமி கேட்கிறார். இதோ அவர் கையெழுத்திட்ட ஒப்பந்தம். 0.5 விழுக்காடு கட்சி என்றால் ஏன் எங்களுக்கு ஐந்து மக்களவை இடங்களையும், ஒரு மாநிலங்களவை இடத்தையும் தருவதாக ஒப்பந்தம் போட்டுக் கொடுத்தீர்கள்?” என்று வினவினார்.
ஒப்பந்தத்தில் ஆண்டு குறிப்பிடப்படாதது குறித்து விளக்கம் அளித்த அவர், “நம்பிக்கைதான் முக்கியம் என இபிஎஸ் கூறிய வார்த்தையை நம்பி அன்று நாங்கள் சம்மதித்தோம். ஆனால் இன்று எங்களை ஏமாற்றிவிட்டு தரக்குறைவாக விமர்சிப்பது ஒரு முதல்வர் வேட்பாளருக்கு அழகல்ல,” எனத் தெரிவித்தார்.
ஒப்பந்தமே போடவில்லை என அதிமுக தரப்பு கூறிவந்த நிலையில், பிரேமலதா தற்போது வெளியிட்டுள்ள இந்த நேரடி ஆதாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இபிஎஸ்சின் விமர்சனங்களுக்கு நாகரிகமான முறையில் தகுந்த ஆதாரத்துடன் அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

