சென்னை: பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணைவேந்தர்களை நியமனம் செய்வது தொடர்பான சட்ட மசோதாவை அதிபர் திரௌபதி முர்மு திருப்பி அனுப்பியுள்ளார்.
இது தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.
தமிழகத்தில் உள்ள 13 பல்கலைக்கழகங்கள் தமிழக உயர் கல்வித்துறையின்கீழ் இயங்கி வருகின்றன.
சட்ட விதிகளின்படி துணைவேந்தர்களை மாநில ஆளுநர் நியமித்து வந்தார். துணைவேந்தரை நியமிக்க கூடுதல் குழு அமைக்கப்படுவது வழக்கம். ஆனால் குழு அமைப்பது தொடர்பாக தமிழக ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்தது.
இதையடுத்து துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு மட்டுமே உள்ளது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பான பல்கலை சட்டங்களில் திருத்தமும் செய்தது தமிழக அரசு.
துணைவேந்தர்களை நியமிக்கவும் நீக்கவும் அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று திருத்தப்பட்ட மசோதா சட்டப் பேரவையில் கடந்த 2022ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நிலையில், அவரது தரப்பில் ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாக ஆளும் திமுக தரப்பு குற்றஞ்சாட்டியது. இதையடுத்து துணைவேந்தர் நியமனம் தொடர்பான மசோதாவை அதிபருக்கு அனுப்பினார் தமிழக ஆளுநர்.
கடந்த மூன்றாண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த மசோதாவை அதிபர் திரௌபதி முர்மு தற்போது திருப்பி அனுப்பியுள்ளார்.

