‘அதிக அபராதத்தை தடுத்திடுக; பூம்புகார் மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை’

‘அதிக அபராதத்தை தடுத்திடுக; பூம்புகார் மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை’

1 mins read
05052cdb-7f03-421b-b042-5800efbbd0ec
மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். - படங்கள்: தமிழக ஊடகம்

சென்னை: இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்கள் மீது அதிக அளவில் அபராதம் விதிப்பதைத் தடுத்திடவும், மீனவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை வழங்கிடவும், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாரைச் சேர்ந்த 37 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி அன்று சிறைபிடிக்கப்பட்டனர். அவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவற்றை வலியுறுத்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு திங்கட்கிழமை (செப்.23) கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், “நான் ஏற்கெனவே சுட்டிக்காட்டியபடி, தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில் மீன்பிடிக்கும் போது, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது.

“கைது செய்யப்படும் மீனவர்களிடம், அவர்களது சக்திக்கு மீறிய அபராதங்களை இலங்கை நீதிமன்றங்கள் விதித்து வருகின்றன. அதோடு, மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் இலங்கை அதிகாரிகள் இதுபோன்று கைது செய்வதைத் தடுத்திட உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எனவே, கைது செய்யப்படும் மீனவர்களிடம் அதிக அளவில் அபராதம் விதிப்பதைத் தடுத்திட இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்,” என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்