கன்னியாகுமரி: மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பு பிரதமர் மோடி தமிழகத்துக்கு வருகைபுரிய உள்ளார்.
இதே வேளையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்குப் பயணமாகிறார்.
இந்திய அரசியல் களம் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. ஏழாம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடைபெறும். இதையடுத்து, ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன.
இந்நிலையில், பிரதமர் மோடி தமிழகத்துக்கு மூன்று நாள் பயணமாக வருகை தருகிறார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுவாமி விவேகானந்தர் பாறைக்குச் செல்லும் அவர், அங்கு தியானம் மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் நடைபெற உள்ள இண்டியா கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
இதற்காக அவர் ஜூன் 1ஆம் தேதியே டெல்லி செல்வார் என்றும் அங்கு அக்கூட்டணியைச் சார்ந்த தலைவர்களைச் சந்தித்துப் பேச இருப்பதாகவும் ஊடகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு தீவிரம்:
தொடர்புடைய செய்திகள்
மோடியின் வருகையையொட்டி கன்னியாகுமரி முழுதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிரதமர் மோடி தியானம் செய்யவுள்ள விவேகானந்தர் மண்டபத்தைச் சுற்றிலும் கடலோரப் பாதுகாப்புப் படையினர் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பிரதமர் மோடியை வரவேற்பதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகளை பாஜக தொண்டர்கள் செய்து வருவதாகக் கூறப் படுகிறது.
ஏழு கட்டங்களாக நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலின் இறுதிக்கட்ட வாக்களிப்பு வரும் ஜூன் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியாக உள்ளன.
இந்நிலையில், பிரதமர் மோடி வரும் மே 30ஆம் தேதி கன்னியாகுமரி செல்கிறார். டெல்லியில் இருந்து விமானத்தில் கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்திற்குச் சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அவர் கன்னியாகுமரிக்குச் செல்கிறார்.
பின்னர் படகு மூலம் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் பாறைக்குச் செல்லும் பிரதமர் மோடி, அன்று மாலை முதல் ஜூன் 1ஆம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்ளப் போவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலும் 7 கட்டமாக நடந்தது. கடைசிக் கட்ட வாக்குப்பதிவு மே 19ஆம் தேதி நடைபெற்றது. அப்போது பிரதமர் மோடி, கேதார்நாத்தில் உள்ள குகையில் தொடர்ந்து 17 மணி நேரம் தியானத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில், 2024 மக்களவைத் தேர்தல் இறுதிக் கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், தியானம் செய்வதற்காக பிரதமர் மோடி கன்னியாகுமரிக்குச் செல்வது குறிப்பிடத்தக்கது.

