சென்னை: தமிழகத்தில் மகளிர் விடியல் பயணத் திட்டத்தின் செயல்பாடு குறித்து அறியும் நோக்கில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநகராப் பேருந்தில் பயணம் மேற்கொண்டு, அங்கிருந்த பெண் பயணிகளிடம் குறைநிறைகளைக் கேட்டறிந்தார்.
மேலும், பேருந்து நிறுத்தத்தைத் தவறவிடாமல், பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்றும் பேருந்து முழுக் கொள்ளளவுப் பயணிகளோடு பயணத்தைத் தொடர வேண்டும் என்றும் அலுவலர்களிடம் திருஸ்டாலின் அறிவுறுத்தினார்.
முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற முதல் நாளில் அறிவித்த ஐந்து திட்டங்களில் மகளிர் விடியல் பயணத் திட்டமும் ஒன்று.
முதல்வர் மேற்கொண்ட ஆய்வின்போது, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர், அரசு உயரதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர் என்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் விடியல் பயணத் திட்டத்தின்கீழ் கட்டணமின்றி ஏறக்குறைய 132.91 கோடி முறை பயணம் செய்துள்ளதாகச் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் தரவுகள்வழி தெரியவந்துள்ளது.