துாத்துக்குடி: துாத்துக்குடியைச் சேர்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ் சொந்தச் செலவில் மாணவர்களை விமானத்தில் அழைத்துச் சென்றிருக்கிறார்.
பண்டாரம்பட்டி அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றும் 56 வயது நெல்சன் பொன்ராஜ், வகுப்பில் பாடம் நடத்தியபோது, விமானம் குறித்து விளக்கம் அளித்திருக்கிறார்.
அப்போது, மாணவர்கள் சிலர், ‘விமானத்தில் பயணம் செய்ய எங்களாலும் முடியுமா?’ எனக் கேட்டனர். அதனால், மாணவர்கள் 17 பேர், பெற்றோர் இருவர் என மொத்தம் 19 பேரை திரு நெல்சன் பொன்ராஜ் சனிக்கிழமை (மார்ச் 22) துாத்துக்குடியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் சென்றார்.
“எங்களால் ரயில், விமானத்தில் செல்ல முடியுமா என்று மாணவர்கள் கேள்வி எழுப்பினர். வறுமையைக் காரணம் காட்டி அவர்கள் கேட்டது எனக்கு மிகவும் வலித்தது. அதனால்தான் இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. விமானத்தில் சென்னை சென்று மெட்ரோ ரயிலில் பயணம் செய்தோம். வண்டலுார் உயிரியல் பூங்காவுக்கும் சென்றோம்.
“எனக்கு 105,000 ரூபாய் செலவானது. என் செலவில் இந்தப் பயணத்துக்கு ஏற்பாடு செய்ததில் மகிழ்ச்சி,” என்றார் திரு நெல்சன் பொன்ராஜ்.