கைதி சித்திரவதை: பெண் காவலர்கள் உட்பட மேலும் 11 பேர் நீக்கம்

1 mins read
1784b052-5550-4be6-9f0b-a657b6daa49a
ஆயுள் தண்டனைக் கைதி சிவகுமார் தாக்கப்பட்ட சிறைச்சாலை. - படம்: தமிழக ஊடகம்

வேலூர்: வேலூர் மத்திய சிறைச்சாலையில் ஆயுள் தண்டனைக் கைதி ஒருவரை சித்திரவதை செய்த சம்பவம் தொடர்பாக மேலும் 11 சிறைக் காவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், மாணிக்கம்கோட்டை பகுதியைச் சேர்ந்த சிவக்குமார், 30, என்பவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி தனது வீட்டு வேலைகளுக்குச் சட்ட விரோதமாகப் பயன்படுத்தியதாகவும் அப்போது டிஐஜி வீட்டில் திருட்டில் ஈடுபட்டதாகக் கூறி, சிறையில் வைத்து 90 நாள்கள் தாக்கப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டதாகவும் கூறி, சிவக்குமாரின் தாயார் கலாவதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டனர்.

சிபிசிஐடி விசாரணைக்குப் பின்னர் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி உட்பட 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கைதி சிவகுமார் தாக்கப்பட்ட சம்பவம் உறுதியானதால் அவர் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், பெண் சிறைக் காவலர்கள் சரஸ்வதி, செல்வி, சிறைக்காப்பாளர் சுரேஷ் ஆகியோர் உட்பட மேலும் 11 சிறைக்காவலர்களை இடைநீக்கம் செய்து சிறைத் துறை டிஜிபி மகேஸ்வர் தயாள் உத்தரவிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்