தனியார்மயமாகும் சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம்

2 mins read
ac230729-8762-4f4e-a649-144cc3dc8652
சென்னையில் 3,436 அரசுப்பேருந்துகள், மாநகரப் போக்குவரத்துக் கழகம் மூலம் இயக்கப்பட்டு வருகிறது.  - படம்: இந்திய ஊடகம்

சென்னை: தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் 3,436 அரசுப்பேருந்துகள், மாநகரப் போக்குவரத்துக் கழகம் மூலம் இயக்கப்பட்டு வருகிறது.

தினந்தோறும் கிட்டத்தட்ட 3 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் அரசு பேருந்துகளில் பயணம் செய்கின்றனர்.

சென்னையில் அரசுப்பேருந்துகள் மட்டுமே இயங்கி வந்த நிலையில், தனியார் பேருந்துகளையும் இயக்க மாநகர் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், மாநகர போக்குவரத்து கழகத்தை தனியார்மயமாக்குவதற்கான நடவடிக்கையில் அரசு இறங்கி உள்ளது.

சென்னையில் ‘ஜிசிசி’ முறையில் 600 மின்சார பேருந்துகளை தனியார் இயக்க ஒப்பந்த புள்ளியை மாநகர போக்குவரத்து கழகம் கோரியுள்ளது.

அதன்படி, மின்சார பேருந்துகளுக்கான நடத்துநர் நியமனம் போக்குவரத்து கழகம் சார்பிலும், பேருந்து பராமரிப்பு, ஓட்டுநர் நியமனம் உள்ளிட்டவை ‘ஜிசிசி’ அடிப்படையில் தனியார் மூலமாகவும் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஊதியம் தொடர்பாக பேச்சுவார்த்தை

இதற்கிடையே, போக்குவரத்து ஊழியர்களின் புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை பிப்ரவரி 13, 14ஆம் தேதிகளில் சென்னை குரோம்பேட்டையில் நடைபெற உள்ளது.

தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் 1.2 மில்லியன பேர் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்தம் முடிந்து ஓராண்டுக்கு மேலாகியும், அடுத்த ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படாமல் உள்ளது.

முதல்கட்ட முத்தரப்பு பேச்சு, சென்னை குரோம்பேட்டையில் கடந்த ஆண்டு ஜூலை 27-ம் தேதி நடைபெற்றது.

அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறாமல், தொழிற்சங்கங்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது. மேலும், வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளன.

இந்நிலையில், போக்குவரத்து ஊழியர்களின் புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்த இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு சங்கம் சார்பிலும் ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளது. மேலும், பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் பிரதிநிதி தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அடையுடன் வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதால், விரைவில் புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்