சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களது அசையும், அசையாச் சொத்து விவரங்களை உடனடியாகத் தாக்கல் செய்ய வேண்டும் என அம்மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அக்டோபர் 31ஆம் தேதிக்குள் அந்த விவரங்களை அளிக்கத் தவறினால், அவர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்படாது என்று திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்வதற்கும் மாற்றாள் பெயரில் சொத்துச் சேர்ப்பைத் தடுப்பதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறப்பட்டது.
தலைமைச் செயலாளர் பிறப்பித்துள்ள சுற்றறிக்கையின்படி, அரசு ஊழியர்கள் அனைவரும் ஒருங்கிணைந்த நிதி, மனிதவள மேலாண்மை அமைப்பு இணையத்தளத்தில் தங்களின் சொத்து விவரங்களை முழுமையாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தங்கள் பெயரில் உள்ள சொத்துகள் மட்டுமன்றி, குடும்ப உறுப்பினர்கள் அல்லது பிற உறவினர்கள் பெயரில் வாங்கப்பட்டுள்ள சொத்துகள் குறித்தும் அதற்கான நிதி ஆதாரம் குறித்தும் விரிவான விவரங்களை அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட கெடுவிற்குள் சொத்து விவரங்களை அளிக்காதவர்கள் நன்னடத்தை விதிகளுக்கு மாறாக நடந்துகொண்டதாகக் கருதப்பட்டு, பதவி உயர்வுக்கான பட்டியலிலிருந்து அவர்களின் பெயர்கள் நீக்கப்படும்.
அரசின் இந்த நடவடிக்கை அரசு ஊழியர்கள் இடையே விவாதப்பொருளாகி இருக்கிறது.
