தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமைச்சர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: மறு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை

2 mins read
b71a67b3-12c3-4b39-89ef-ad1bcca590fa
அமைச்சர் தங்கம் தென்னரசு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன்.  - படம்: தமிழக ஊடகம்

புதுடெல்லி: வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துகளைக் குவித்த வழக்கின் தொடர்பில், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரிடம் கீழமை நீதிமன்றம் மீண்டும் விசாரணை நடத்தவேண்டும் என்ற உயர்நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக அமைச்சர்களாக உள்ள தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் கடந்த 2006ல் அமைச்சர்களாக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம், அனைவரையும் வழக்கில் இருந்து விடுவித்து தீர்ப்பளித்தது.

இதையடுத்து, இநதத் தீர்ப்புக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்குத் தொடர்ந்தார்.

வழக்குத் தொடர்பான வாதங்களைக் கேட்டறிந்த பின்னர், இரு அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளையும் கீழமை நீதிமன்றங்கள் மீண்டும் விசாரிக்கவேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா்.

இதனை எதிர்த்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அவரது மனைவி ஆர்.ஆதிலட்சுமி, அமைச்சர் தங்கம் தென்னரசு, அவரது மனைவி டி.மணிமேகலை ஆகியோர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 6) விசாரணைக்கு வந்ததைத் தொடர்ந்து, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் கீழமை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்துடன், இவ்வழக்குத் தொடர்பாக தமிழக அரசும் உயர் நீதிமன்றப் பதிவாளரும் நான்கு வாரங்களில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

குறிப்புச் சொற்கள்