பெண்கள் பெயரில் சொத்துப் பதிவு சலுகை: 3.71 லட்சம் பேர் பலன்

பெண்கள் பெயரில் சொத்துப் பதிவு சலுகை: 3.71 லட்சம் பேர் பலன்

2 mins read
4bbd023b-80fa-4675-a851-9aa001e4a465
தங்கம் தென்னரசு. - படம்: மாலைமலர்
multi-img1 of 2

சென்னை: பெண்கள் பெயரில் சொத்து பதிவு செய்தால், ஒரு விழுக்காடு பதிவுக்கட்டணம் குறையும் எனத் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமலுக்கு வந்த இந்தத் திட்டத்தின்கீழ் இதுவரை 3.71 லட்சம் பேர் பயன் பெறுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் வரவு, செலவுத் திட்ட அறிக்கையில் இது குறித்து விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

ரூ.10 லட்சம் வரை மதிப்புள்ள வீடுகள், மனைகள், விவசாய நிலங்களை அசையாச் சொத்துகளைப் பதிவு செய்யும்போது அவற்றுக்கான மொத்தப் பதிவுக் கட்டணத்தில் ஒரு விழுக்காடு குறைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நடைமுறையில் உள்ள இந்தத் திட்டத்தின்கீழ் இதுவரை 371,705 பேர் பயனடைந்துள்ளனர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசு செயல்படுத்தி வரும் இதுபோன்ற திட்டங்கள், முயற்சிகளால் இந்தியா முழுவதும் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண்களில், 41% தமிழகத்தில் பணிபுரிகிறார்கள் என்ற பெருமையை அடைந்துள்ளதாக தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்துப் பாதுகாக்கும் வகையிலும் இடைநிற்றல் இன்றி 18 வயது வரை பள்ளிப்படிப்பைத் தொடரவும் மாதந்தோறும் ரூ.2,000 வழங்கும் அன்புக்கரங்கள் திட்டத்தின்கீழ் 10,637 குழந்தைகள் பயனடைந்துள்ளதாக நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து பேசியபோது அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டார்.

திருநங்கைகள் சுயமாகத் தொழில் செய்வதை தமிழக அரசு ஊக்குவித்து மானியம் வழங்கி வருவதாகக் குறிப்பிட்ட அவர், திருநங்கைகளுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் ஊர்க்காவல் படையில் சேர்ந்து பணியாற்ற வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றார்.

அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் காலை உணவுத் திட்டம் நல்ல பலன் அளித்து வருவதாகத் தெரிவித்த அமைச்சர், பள்ளிகளுக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தத் திட்டத்துக்காக ரூ.1,284 கோடி செலவிடப்பட்டுள்ளதாக திரு தங்கம் தென்னரசு மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்