மதுரை: மதுரையில் மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் சொத்து வரி முறைகேடு தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாநகராட்சியில் நடந்த பல கோடி ரூபாய் வரி முறைகேடு புகார் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இதில் மாநகராட்சி வரி வசூலிப்பவர், மேயரின் கணவர் பொன் வசந்த், வருவாய் உதவியாளர், முன்னாள் உதவி ஆணையாளர் உள்ளிட்ட 17 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு உள்ளனர். பதவியில் இருந்த பலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
மேலும் 5 மண்டலத் தலைவர்கள் மற்றும் நிலைக்குழு தலைவர்கள் என ஏழு பேர் பதவி விலகினர். இந்த வரிமுறைகேடு தொடர்பாக அ.தி.மு.க. சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி ஐ.பி.எஸ். அதிகாரி தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில், அதிமுகவினருக்கும் தொடர்புள்ளது எனக் கூறப்படுகிறது. அதையடுத்து அடுத்த கட்ட விசாரணை மேற்கொள்ளப்படுவதாகச் சொல்லப்படுகிறது.
மதுரை மாநகராட்சியில் மண்டலத் தலைவர்கள், அதிகாரிகள் ஆகியோரின் துணையோடு பல கோடி ரூபாய் அளவுக்கு சொத்துவரி முறைகேடு நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதையடுத்து திமுக அரசு அவர்கள் அனைவரிடமும் அவசரகதியில் பதவி விலகல் கடிதங்களை எழுதி வாங்கியதாகத் தெரிகிறது.
இதில், அதிமுகவைச் சேர்ந்த சிலருக்கும் தொடர்பு உள்ளதாகவும், அதிமுகவின் முக்கிய பிரமுகர்களுக்குச் சொந்தமான வணிகக் கட்டடங்களுக்கான வரியை திமுகவினர் தாராளமாக குறைத்துள்ளதாகவும் செய்திகள் வருவதால் அதுகுறித்தும் இப்போது விசாரிக்கப்படுகிறது.
முன்னதாக, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக கவுன்சிலர் விஜயலட்சுமியின் கணவரான வரிக்கண்ணன் அளித்த வாக்குமூலத்தில், மண்டலத்தலைவர் பாண்டிச்செல்வியின் கணவரும் முன்னாள் திமுக துணை மேயருமான மிசா பாண்டியன், 2 திமுக கவுன்சிலர்கள், மதிமுக கவுன்சிலர் பாஸ்கரன் ஆகியோருக்கும் இந்த முறைகேட்டில் தொடர்பு இருப்பதாகவும், அதிமுகவைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் சோலை ராஜாவும் ஒரு கட்டடத்திற்குச் சொத்துவரி குறைப்பு செய்ததில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறாராம்.
இவரது வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே பொன் வசந்தை சென்னை வரைக்கும் தேடிச் சென்று கைது செய்துள்ளது. காவல்துறை. மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் மேயர் இந்திராணியையும் அழைத்து விசாரிக்கலாம் என்று கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், மதுரை மாநகராட்சியில் நடந்த பல கோடி ரூபாய் சொத்து வரி விதிப்பு முறைகேட்டில் கணவர் கைதானதைத் தொடர்ந்து, மேயர் இந்திராணி பதவி விலகும் முடிவில் உள்ளார் எனக் கூறப்படுகிறது. அவர் பதவி விலகினால் இப்போது துணை மேயராக உள்ள சிபிஎம் கட்சியைச் சேர்ந்த நாகராஜன்தான் பொறுப்பு மேயராகச் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் கைதானதால், தொடர்ந்து மேயராகச் செயல்படுவதில் இந்திராணி பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. எனவே, அவர் எப்போது வேண்டுமானாலும் பதவியில் இருந்து விலகுவதற்கு நெருக்கடி தரக்கூடும் என்றும் அவரது இடத்தைப் பிடிக்க திமுக பெண் கவுன்சிலர்கள் சிலர் மாவட்ட அமைச்சர்களிடமும் மாவட்டச் செயலாளர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என்றும் சொல்லப்படுகிறது.

