சென்னை: பெண்கள் பெயரில் பத்து லட்சம் ரூபாய் வரையிலான அசையா சொத்துப் பதிவுக்கான கட்டணம் 1% அளவு குறைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை, உயர்கல்வி பயிலும் பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய், இலவசப் பேருந்து பயணம் உள்ளிட்ட பல்வேறு பெண்கள் நலன் சார்ந்த திட்டங்கள் ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளன.
இந்நிலையில், ஏப்ரல் மாதல் முதல் 10 லட்ச ரூபாய் வரையிலான மதிப்புள்ள வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அசையாச் சொத்துகள் பெண்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டால் பதிவுக் கட்டணத்தில் 1% கட்டண விலக்கு பெற முடியும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வரசு செலவுத் திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த அறிவிப்பு இப்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளதாகப் பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் தற்போது மேற்கொள்ளப்படும் 75% பத்திரப் பதிவுகள் இப்புதிய அறிவிப்பின்கீழ் பயன்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மகள், சகோதரி உள்ளிட்டோருக்கு வழங்கப்படும் சொத்துகளுக்கு தானப்பத்திரம் என்ற பெயரில் குறைந்த பதிவுக்கட்டணம் பெறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
தற்போது பிற சொத்துகளுக்கும் ஒரு விழுக்காடு அளவுக்கு பதிவுக்கட்டணம் குறைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு பெண்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பெண்களைக் குறிவைத்து அடுத்தடுத்து பல்வேறு நலத்திட்டங்களை ஆளும் தரப்பு அறிவித்து வருகிறது.
அத்தகைய அறிவிப்புகளில் ஒன்றாகவே இந்த புதிய சலுகையும் பார்க்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.
இதே போல் மகளிரைத் தொழில்முனைவோராக உயர்த்திடும் வகையில், 20% மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை வங்கிக் கடன் பெற்று, மகளிர் பல்வேறு தொழில்கள் தொடங்கிட உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், விற்பனைக்கான ஆலோசனைகளும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கான உத்தரவும் விரைவில் அரசாணையாக வெளியிடப்படும் என தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

