திருவாரூர்: ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை கோயில் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரவேண்டும் என்று கூறி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெகன்னாத் என்பவர் கடந்த 2020ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
பல ஆண்டுகளாக இவ்வழக்கு நடைபெற்று வந்த நிலையில், ஆக்கிரமிப்பு நிலங்களை தனியாரிடம் இருந்து மீட்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், பல்வேறு காரணங்களாலும், பொதுமக்கள் எதிர்ப்பாலும் இப்பணி தாமதமானது.
இதையடுத்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 21 நாள்களுக்குள் கோயில் நிலங்களை மீட்டு கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, அறநிலையத் துறை இணை ஆணையர் குமாரதுரை, உதவி ஆணையர்கள், அறநிலையத்துறை செயல் அலுவலர் குமரவேல் ஆகியோர் அடங்கிய குழுவினரும், வருவாய்த்துறை கூடுதல் வட்டாட்சியர் பார்வதி மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் அடங்கிய குழுவினரும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வியாழக்கிழமை நடவடிக்கை மேற்கொண்டனர்.
ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலத்தில் கோயில் நிர்வாகத்தின் பெயர்ப் பலகையை வைக்க முற்பட்டபோது விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுத்திருந்தவர்கள், நிலங்களை அனுபவித்து வருபவர்கள், பொதுமக்கள், விவசாயிகள், அரசியல் கட்சியினர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் திரண்டு வந்து தடுத்து நிறுத்தியதோடு சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

