சென்னை: தமிழகத்திற்குச் செல்லவிருக்கும் அமித்ஷாவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
காந்தியின் புகழை அண்மைக்காலமாக பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மறைப்பதாக குற்றஞ்சாட்டிய அவர்ம் அமித்ஷாவைக் கண்டித்து கறுப்புக்கொடி ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவர் என்றும் தெரிவித்தார்.
காந்தியடிகளின் 78வது நினைவு நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்பு தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான திரு.கே.வீ.தங்கபாலு அவர்கள், தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி அமைப்புச் செயலாளர் திரு.ராம்மோகன், முன்னாள் பொருளாளரும், துணைத்தலைவர்கள் திரு.நாசே ஜெ.ராமசந்திரன், திரு.சொர்ணா சேதுராமன், திருமதி இமயா கக்கன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
அதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது, “மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வந்து எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கெல்லாம் காங்கிரஸ்காரர்கள் அவருக்கு கறுப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவர்,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, முறைகேடுகள் போன்ற குற்றங்களுக்கு காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இரவு நேரங்களில் பெண்கள் நகைகளை அணிந்துகொண்டு பாதுகாப்பான முறையில் தனது வீடுகளுக்குச் செல்வதே சுதந்திரம், பெண்களைக்காப்பாற்றுவது குறித்து கடமையும் பொறுப்பும் காவல்துறைக்கு உள்ளது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.