மேட்டுப்பாளையம்: கோவையை அடுத்த மேட்டுப்பாளையத்தில் சாலை விரிவாக்கப் பணிக்காக மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களைக் காவல்துறை கைது செய்தது.
மேட்டுப்பாளையம் - அன்னூர் - அவினாசி சாலை, மொத்தம் 38 கிலோ மீட்டர் தூரத்தில் இருவழிச்சாலையாக உள்ளது. 23 அடி அளவுடன் குறுகிய சாலையாகவும் இருவழித்தடமாகவும் அச்சாலை உள்ளதால் அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல், விபத்துகள் ஏற்பட்டு வந்தன.
இதைத் தவிர்க்க மாநில நெடுஞ்சாலைத்துறையின் சார்பில், ரூ.250 கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அத்திட்டப்பணிக்காக மேற்கண்ட வழித்தடத்தில் உள்ள ஏறத்தாழ 1,432 மரங்களை அகற்ற முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மே 24ஆம் தேதி காலை சாலையோரத்தில் உள்ள மரங்களை வெட்டுவதற்காக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், ஊழியர்கள் இயந்திரத்துடன் வந்தனர். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அங்கு வந்து மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், மரம் வெட்டும் பணியில் ஈடுபட்ட ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.
நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்திலுள்ள மரங்கள் தான் வெட்டப்படுவதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். இருப்பினும், பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் 17 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து சாலையோரம் இருந்த மரங்களை வெட்டும் பணியை நெடுஞ்சாலைத் துறையினர் தொடங்கினர்.


