எரிஉலைத் திட்டத்தைக் கைவிடக் கோரி சென்னையில் போராட்டம்

2 mins read
7caf1973-0738-44ca-9fae-32483c5a843a
கொடுங்கையூரில் செயல்படுத்தப்படவுள்ள எரிஉலைத் திட்டத்தைக் கைவிடக் கோரி, வடசென்னை மக்கள் ஞாயிற்றுக்கிழமை மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: வடசென்னை, கொடுங்கையூரில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் எரிஉலைத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. மக்களுக்குப் பேராபத்தை விளைவிக்கும் அந்தத் திட்டத்தைக் கைவிடக் கோரி வடசென்னைக் குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பினர் கொடுங்கையூரில் ஞாயிற்றுக்கிழமை மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொடுங்கையூர் வளாகத்தில் கடந்த 40 ஆண்டுகளாகக் கொட்டப்பட்ட பழைய குப்பைகளை அகழ்ந்தெடுக்கும் பணிகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. அங்குச் சுற்றுச்சூழல் பூங்கா வரும் என அப்பகுதியைச் சுற்றியுள்ள பொதுமக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

இந்நிலையில், அங்கு மக்காத, மறுசுழற்சி செய்ய முடியாத குப்பைகளை எரித்து மின்சாரம் தயாரிக்கும் எரிஉலையை அமைக்க மாநகராட்சி முடிவு செய்திருப்பது தெரியவந்தது. இது அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.1,248 கோடி முதலீட்டில் ஆன இந்தத் திட்டத்திற்கான ஏலக்குத்தகையை டெல்லி எம்எஸ்டபிள்யூ நிறுவனத்திற்கு சென்னை மாநகராட்சி அளித்துள்ளது.

அதற்காக கொடுங்கையூரில் 75 ஏக்கர் இடத்தை மாநகராட்சி ஒதுக்கியுள்ளது. இதில் நாளொன்றுக்கு 3,750 டன் எடையுள்ள குப்பைகள் கையாளப்பட உள்ளன. ஒவ்வொரு நாளும் 2,100 டன் குப்பையிலிருந்து 31 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வடசென்னை குடியிருப்புவாசிகளுக்கு தீங்கு விளைவிக்கும் இந்தத் திட்டத்தைக் கைவிடக் கோரி தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை, கண்ணதாசன் நகர் வழியாக மீனாம்பாள் சாலை, கேப்டன் காட்டன் கால்வாய் பாலம் மற்றும் மகாகவி பாரதி நகர், வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் கல்லூரிவரை அப்பகுதி குடியிருப்புவாசிகள் நீண்ட வரிசையில், கொடுங்கையூரில் எரிஉலைத் திட்டம் வேண்டாமென வலியுறுத்தும் பதாகைகளுடன், முகக்கவசம் அணிந்து மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“இந்தத் திட்டம் ஏற்கெனவே ஹைதராபாத் நகரில் செயல்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இது ஹைதராபாத் மாடல் எனக்கூறி, எரிஉலைத் திட்டத்தை அரசு கொண்டு வருகிறது.

“அங்கெல்லாம் மக்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்திருக்கிறோம். இதன் பிறகும் எரிஉலைத் திட்டத்தைச் செயல்படுத்த முயன்றால், எங்கள் போராட்டம் மேலும் தீவிரமடையும். எரிஉலைத் திட்டத்தை ராஜா அண்ணாமலைபுரத்தில், பசுமைவழிச் சாலையில் அமைக்க வலியுறுத்திப் போராடுவோம்,” என்றார்.

நீரியல் நிபுணர் எஸ்.ஜனகராஜன் கூறும்போது, “எரிஉலைத் திட்டம் இங்கு கொண்டு வந்தால், காற்று, நீர், நிலம் என அனைத்தும் பாதிப்படைந்து, இப்பகுதியின் சுற்றுச்சூழலே மோசமாகப் பாதிக்கப்படும். மக்காத குப்பையை அழிக்க எரிஉலை தீர்வாகாது. மாற்றுவழியை அரசுதான் கண்டுபிடிக்க வேண்டும். மக்களுக்கு ஆபத்தை உருவாக்கும் திட்டத்தைக் கொண்டுவரக் கூடாது,” என்று கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்