தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி போராட்டம்

1 mins read
b5d872fa-7963-40f6-a77d-bfe934d687a8
நாமக்கல்லில் சுங்கச்சாவடியை முற்றுகையிட்ட லாரி உரிமையாளர் சங்கத்தினர். - படம்: தமிழக ஊடகம்

நாமக்கல்: லாரி உரிமையாளர் சம்மேளனத்தினர் உள்பட பல்வேறு சங்கத்தினர் நாமக்கல்லில் சுங்கச் சாவடியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சம்மேளனம், கட்டுனர் சங்கம், நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர் சங்கம், மணல் மாட்டு வண்டி உரிமையாளர் சங்கம் ஆகிய சங்கங்கள் இணைந்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல. ராசாமணி தலைமையில் நாமக்கல் ராசாம்பாளையம் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் உயர்த்தப்பட்ட கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்; தமிழகத்தில் உரிமம் முடிந்த நிலையில் உள்ள 22 சுங்கச்சாவடிகளை உடனடியாக மூட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்து சாலை மறியலிலும் அவர்கள் ஈடுபட்டனர்.

கடந்த ஏழு மாதங்களாக மணல் குவாரிகள் செயல்படாததால் தமிழகத்தில் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளதாலும் தரமற்ற எம்.சாண்ட் பயன்படுத்தப்படும் நிலையில் அதன் விலையும் பன்மடங்கு உயர்ந்துள்ளதாலும் கட்டுமானப் பணிகள் பாதிப்படையாமல் இருக்க தமிழக அரசு உடனடியாக மணல் குவாரிகளை திறக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் முழக்கம் எழுப்பப்பட்டது.

விரைந்து வந்த காவல்துறையினர் சுங்கச் சாவடி முன்பு அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

குறிப்புச் சொற்கள்