மணப்பாறை அருகே காவல் துறையைக் கண்டித்துப் போராட்டம்

மணப்பாறை அருகே காவல் துறையைக் கண்டித்துப் போராட்டம்

1 mins read
c15edc4f-1d89-4626-911d-3ba40a708615
வெள்ளையக்கோன்பட்டி மக்கள் வாக்களிப்பதை நிறுத்திவிட்டு வளநாடு கைகாட்டி - புத்தாநத்தம் சாலையில் முட்கள் மற்றும் கட்டைகளைப் போட்டு தடுப்பு ஏற்படுத்திச் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  - படம்: இந்து தமிழ் திசை

திருச்சி: மணப்பாறை அருகே காவல்துறையைக் கண்டித்துப் பொதுமக்கள் வாக்களிக்க மறுத்து, போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை தொகுதி வெள்ளையக்கோன்பட்டியில் அரசுத் தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி எண் 225ல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் வாக்குச்சாவடிக்கு 100 மீட்டருக்கு அப்பால் அரசியல் கட்சியினர் தங்கள் கட்சிச் சின்னத்திற்கு வாக்கு கேட்டுப் பிரசாரம் செய்துகொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது அவ்வழியாக வந்த காவல்துறையின் அதிரடிப்படையினர் அரசியல் கட்சிப் பிரமுகர்கள் சிலரைக் கலைந்து போகச் சொல்லித் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

திமுக நிர்வாகி சண்முகமூர்த்தி என்பவரைக் தாக்கியதோடு, காவல்துறையினர் அவரை வேனில் ஏற்றி அழைத்துச் சென்றுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த வெள்ளையக்கோன்பட்டி மக்கள் வாக்களிப்பதை நிறுத்திவிட்டு, வளநாடு கைகாட்டி - புத்தாநத்தம் சாலையில் முட்கள் மற்றும் கட்டைகளைப் போட்டுத் தடுப்பு ஏற்படுத்திச் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பொதுமக்களின் மறியலால் சண்முகமூர்த்தி விடுவிக்கப்பட்ட நிலையிலும் பொதுமக்கள் மறியல் மற்றும் வாக்களிப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

பொதுமக்களின் மறியலால் உள்ளூர் நேரப்படி முற்பகல் 11.10 மணிமுதல் பிற்பகல் 2.40 வரை வாக்குப்பதிவு நடைபெறவில்லை.

குறிப்புச் சொற்கள்