மதுரை கப்பலூர் சுங்கச்சாவடிக்கு தீர்வுகாண தேர்தலில் களமிறங்க போராட்டக்காரர்கள் திட்டம்

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடிக்கு தீர்வுகாண தேர்தலில் களமிறங்க போராட்டக்காரர்கள் திட்டம்

2 mins read
7cc6020f-6efb-4708-9036-71e34242da5f
விபத்துகளைத் தவிர்க்க மதுரை, கப்பலூர் சுங்கச் சாவடியை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி சுங்கச்சாவடி போராட்டக்காரர்கள் கடந்த 15 ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். - இந்து தமிழ் திசை

மதுரை: மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி போராட்டக்காரர்கள் பல ஆண்டுகளாகப் போராடி ஓய்ந்திருந்தனர். இப்போது மீண்டும் அந்தப் போராட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் திருமங்கலம் தொகுதிக்குள் தேர்தல் பிரசாரத்திற்கு வரும்போதெல்லாம், ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால்....’ என்று சுங்கச்சாவடி பற்றி வாக்குறுதி அளிக்கத் தொடங்கியுள்ளனர்.

ஆனால், சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்புக் குழுவினர் யார் வாக்குறுதியையும் நம்பாமல் வரும் 5ஆம் தேதி திருமங்கலத்தில் அடுத்தகட்டப் போராட்டத்துக்கும், சட்டப் பேரவைத் தேர்தலில் எடுக்க வேண்டிய முடிவுகள் பற்றியும் ஆலோசிக்க உள்ளதாகத் தெரிவித்தனர்.

இது குறித்து அக்குழுவினர் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் “கப்பலூர் சுங்கச்சாவடியை இடமாற்றக் கோரி கடந்த 15 ஆண்டுகளாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம்.

“சுங்கச்சாவடி அமைந்துள்ள திருமங்கலம் தொகுதி மக்களுக்கு நிரந்தரத்தீர்வு வேண்டி சிறப்பு ஆலோசனைக் கூட்டம் வரும் 5ஆம் தேதி (வியாழக்கிழமை) இரவு 7 மணியளவில் திருமங்கலம் தனியார் மண்டபத்தில் நடைபெற உள்ளது.

“கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது மதுரை ஒத்தக்கடையில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்ததும் கப்பலூர் சுங்கச்சாவடி அகற்றப்படும் என வாக்குறுதி அளித்தார்.

“அந்தக் கூட்டத்தில், சுங்கச் சாவடியால் மக்கள், வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்குவோர் அன்றாடம் படும் சிரமங்களை ஒரு குறும்படம் மூலம் பார்வையாளர்களுக்குப் போட்டுக்காட்டி ஸ்டாலின் கவலை தெரிவித்திருந்தார்.

“அதனால், திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்தச் சுங்கச்சாவடி அகற்றப்படும் அல்லது இடமாற்றம் செய்யப்படும் என்று தென் மாவட்ட மக்கள் நம்பினர். ஆனால், இப்போது திமுக ஆட்சி நிறைவுபெறும் நிலையில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலும் நெருங்கிவிட்டது. அந்தச் சுங்கச் சாவடி அப்படியேதான் உள்ளது.

“கடந்த தேர்தலில் நம்பி ஏமாந்துவிட்டோம். இந்த முறை அவ்வளவு எளிதாக விடப்போவதில்லை. கடந்த நான்கு ஆண்டுகளாக பலமுறை முதல்வரைச் சந்திக்க அனுமதி கேட்டும் கடைசி வரை கிடைக்கவில்லை.

“அதனால், அரசியல் கட்சியினருக்கு மக்களின் வலியைப் புரிய வைக்க, எங்கள் போராட்டக்குழு சார்பில் வரும் தேர்தலில் வேட்பாளரை களமிறக்கப் போகிறோம். அப்போதுதான் இப்பிரச்சினைக்கு முடிவு கிடைக்கும்,” என சுங்கச்சாவடி எதிர்ப்புக் குழுவினர் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்