சென்னை: மெட்ரோ ரயில்களின் அனைத்து பெட்டிக் கதவுகளிலும் பயணிகள் சிக்கிக்கொண்டு இழுத்துச்செல்வதைத் தடுக்கும் பயணிகள் பாதுகாப்பு அம்சத்தை நிறுவுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் செய்தி அறிக்கை மூலம் இதனைத் தெரிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், முதற்கட்டத்தில் இயங்கும் 52 ரயில்களின் அனைத்து பெட்டிக் கதவுகளிலும் ‘ஆன்டி டிராக் ஃபீச்சர்’ (Anti Drag Feature) எனும் ரூ.48.33 கோடி மதிப்பிலான அம்சத்தை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தை ஒரு தனியார் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் இயக்குநர் மனோஜ் கோயல் முன்னிலையில், அதன் தலைமை மேலாளர் ராஜேந்திரன், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் இயக்குநர் புனீத் மெஹ்ரோத்ரா ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும் சிறந்த சேவை வழங்கும் தொடர் முயற்சிகளின் ஓர் அங்கமாகவும் மெட்ரோ ரயில் பாதையின் நீல, பச்சை வழித்தடங்களில் இயங்கும் மெட்ரோ ரயில்களின் கதவுகளில் பயணிகள் சிக்காமல் இருக்க புதிய அம்சம் அமைக்கப்படவுள்ளது.
தற்போது, மெட்ரோ ரயில் கதவுகள் தானியக்க முறையில் இயங்குகின்றன. இவை தடைகளைக் கண்டறியும் அம்சத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
பயணிகள் ஏறி முடித்தவுடன், நிலையங்களில் கதவுகள் மூடும்போது, கதவுகளுக்கு இடையூறாக இருக்கக்கூடிய பொருள்களை இந்த அமைப்பு கண்டறியும்.
தொடர்புடைய செய்திகள்
பயணிகளின் பாதுகாப்பை மேலும் மேம்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, பயணிகள் கதவில் சிக்காமல் பார்த்துக்கொள்வதற்கு மேம்பட்ட தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
இதன் மூலம், மெட்ரோ ரயிலிலிருந்து இறங்கும்போது தவறுதலாக கதவுகளுக்கு இடையில் சிக்கிக்கொள்ளக்கூடிய சேலைகள், இடைவார்கள், பைகள் போன்ற மெல்லிய பொருள்களையும் கண்டறிய முடியும்.
இந்த புதிய அமைப்பின் தனிச்சிறப்பு என்னவென்றால், இது இழுத்துச் செல்லும் (pull and drag force) விசையைக் கண்டறியும் திறன் கொண்டது.
ஒருவர் அல்லது பொருள் கதவில் சிக்கிக்கொண்ட நிலையில் மெட்ரோ ரயில் நகரத் தொடங்கும்போது அது இழுக்கப்பட்டால், இந்த அம்சம் அதைக்கண்டறியும்.

