கோவில் நகரங்கள், 2, 3ஆம் நிலை நகரங்கள் மேம்பாட்டுக்கு ரூ.5,000 கோடி ஒதுக்கீடு

கோவில் நகரங்கள், 2, 3ஆம் நிலை நகரங்கள் மேம்பாட்டுக்கு ரூ.5,000 கோடி ஒதுக்கீடு

2 mins read
eba2c622-4022-4620-884a-91ea2f01bd00
மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவில். - படம்: ஸ்மார்ட்ஹிஸ்டரி

புதுடெல்லி: தமிழகத்தில் உள்ள கோவில் நகரங்கள், 2, 3ஆம் நிலை நகரங்களின் மேம்பாட்டுக்கு ரூ.5,000 கோடி நிதி ஒதுக்கப்படும் என மத்திய வரவு, செலவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புறப் பொருளியல் வட்டாரத் திட்டத்தின் மூலம் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் வளர்ச்சி, புத்தாக்கம், வாய்ப்புகள் உருவாக்கம் ஆகியவற்றின் ‘இஞ்சின்’களாக நகரங்கள் திகழ்வதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இதைக் கருத்தில் கொண்டு இரண்டு, மூன்றாம் நிலை நகரங்கள், கோவில் நகரங்களை மையமாகக் கொண்டு புதிய மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அந்த நகரங்களில் நவீன உள்கட்டமைப்பு வசதிகள், மேம்படுத்தப்பட்ட வசதிகள் தேவைப்படுகின்றன என்றும் புதிய திட்டத்தின் மூலம் அந்நகரங்களின் பொருளியல் பங்களிப்பு திறனை மேம்படுத்த முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.

சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் சிறப்பான தீர்வை எட்டும் இலக்குடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

“நாடு முழுவதும் 5 லட்சத்துக்கும் மேல் மக்கள் தொகை கொண்டுள்ள இரண்டு, மூன்றாம் நிலை நகரங்கள் அனைத்திலும் சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருவதாகக் குறிப்பிட்ட அவர், இதன் மூலம் அந்த நகரங்கள் வளர்ச்சியின் மையங்களாக மேம்படுத்தப்படும் என்றார்.

கடந்த 10 ஆண்டுகளில் நகர்ப்புற மேம்பாட்டுக்கான பல்வேறு சிறந்த திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நகர்ப்புறப் பொருளியல் வட்டாரத் திட்டத்தில் தமிழகத்தில் இருந்து கோயமுத்தூர், ஈரோடு, திருப்பூர் ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது.

மேலும், ஒடிசாவில் இருந்து புவேனஸ்வர், புரி, கடக், மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே, குஜராத்தின் சூரத், உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி, ஆந்திராவின் விசாகப்பட்டினம் ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

குறிப்புச் சொற்கள்