தரமற்ற மேம்பாலத்தை இடித்த பொதுமக்கள்

தரமற்ற மேம்பாலத்தை இடித்த பொதுமக்கள்

1 mins read
6b267e00-a7a2-4552-8084-e8197f0a53a5
பாலத்தின் ஒரு பகுதியை இடித்த மக்கள். - படம்: தினமணி

வேலூர்: ஒடுகத்தூர் அருகே தரமற்ற முறையில் கட்டப்படும் மேம்பாலத்தை அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து இடித்துள்ளனர்.

ஒடுகத்தூர் அடுத்துள்ள பின்னத்துரை ஊராட்சி, பொம்மன்கொட்டாய் பகுதியில் இருந்து கொல்லைமேடு செல்லும் வழியில் கே.ஜி. ஏரியூர் கிராமத்தில் உள்ள ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறுவதற்கான கால்வாய் உள்ளது.

இந்தக் கால்வாயை கொல்லைமேடு பகுதிக்குச் செல்லும் குடியிருப்பாளர்களும் விவசாய நிலங்களுக்குச் செல்வோரும் பயன்படுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே கால்வாயின் குறுக்கே புதிய தரைமட்ட மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் இந்த மேம்பாலக் கட்டுமானப் பணிகள், மிகவும் தரமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

சிமெண்ட் கலவை சரியாக இல்லை என்று புகார் கூறிய மக்கள், தரம் குறைந்த பொருள்கள் பயன்படுத்தப்படுவதாகவும் பாலம் திறப்பதற்கு முன்பே சேதமடையும் அபாயம் இருப்பதாகவும் கவலை தெரிவித்தனர்.

இந்நிலையில் சனிக்கிழமை திரண்ட அப்பகுதி பொதுமக்கள், பல ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தை இடித்ததாகக் கூறப்படுகிறது.

தற்போது கட்டப்பட்டுள்ள பகுதியை இடித்துவிட்டு, முற்றிலும் தரமான முறையில் புதிய மேம்பாலத்தைக் கட்டித்தர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கால்வாய்ப் பகுதியில் கட்டப்படும் பாலம் என்பதால், மழைக்காலங்களில் நீரின் வேகத்தைத் தாங்கும் அளவிற்குப் பாலம் தரத்துடன் கட்ட வேண்டும் என்று கூறி இரும்புக் கம்பி, கடப்பாரை போன்றவற்றைக் கொண்டு பாலத்தை இடித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

குறிப்புச் சொற்கள்