சென்னை: தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம், மக்களிடம் கொரோனா எதிர்ப்புச் சக்தி 97 விழுக்காடு அளவுக்கு அதிகரித்திருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
கொரோனா தொற்றுப் பரவல் தொடங்கிய வேளையில் 32 விழுக்காடாக இருந்த நோய் எதிர்ப்புச் சக்தியானது, தற்போது மும்மடங்கு அதிகரித்திருப்பது பொது சுகாதாரத் துறை ஆய்வறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது என்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் குறிப்பிட்டார்.
கொரோனா தடுப்பூசி, உடற்பயிற்சி, நல்ல உணவு முறை ஆகியவற்றால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்துள்ளதாகப் பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
“தமிழகத்தில், ‘ஓமைக்ரான்’ வகை கொரோனா பாதிப்புதான் உள்ளது. இது வீரியமற்றது. உயிர் பாதிப்பு ஏற்படுத்தக்கூடியது அல்ல. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் இருமல், சளி, காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட்டு, மூன்று நாள்களில் குணமடைந்து விடுகின்றனர்.
“இந்தாண்டு கொரோனா நோய் பாதிப்புகளுக்கான தீவிர தன்மை குறித்து கண்டறிய பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன,” என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
மொத்தம் 1,214 முதியவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், அவர்களில் 97 விழுக்காட்டினருக்கு நோய் எதிர்ப்புச்சக்தி இருப்பது உறுதியானதாகத் தெரிவித்தார்.
“யாருக்கும் கொரோனா பாதிப்பு இருக்காது எனக் கூறவில்லை. முதியோர், இணை நோயாளிகள், கர்ப்பிணியப் பெண்கள் ஆகியோர் பொது இடங்களுக்குச் செல்லும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது,” என்று மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தி உள்ளார்.