தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சுனாமியால் உயிரிழந்தோருக்காக மெரினா கடற்கரையில் பொதுமக்கள் அஞ்சலி

2 mins read
0a47944c-6914-4e7f-87c0-2490d28532d2
சுனாமி ஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களின் 20வது ஆண்டு நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்துவதற்கு சென்னை மெரினா கடற்கரையில் கூடிய பொதுமக்கள். - படம்: ஊடகம்
multi-img1 of 2

சென்னை: கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி இந்தோனீசியாவில் உள்ள சுமத்ரா தீவுக் கடல் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், உலகின் பல்வேறு பகுதிகளை சுனாமி என்னும் ஆழிப்பேரலை தாக்கியது. இதில், 200 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்; ஆயிரக்கணக்கானோரைக் காணவில்லை.

தமிழகத்தில் சுனாமி தாக்குதலால் சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்குக் கடலோரப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. தமிழகத்திலும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், சுனாமியால் உயிரிழந்தோரின் 20வது ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில், தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில், சென்னை மெரினா கடற்கரையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். தமிழ் நாட்டின் ஆளுநர் உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொண்டு 2004 ஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அந்த அஞ்சலிக் கூட்டத்தில் கலந்துகொண்டோர் மௌன ஊர்வலத்தில் பங்கேற்றனர். தொடர்ந்து, உயிரிழந்தோருக்காக மெழுகுவத்தி ஏற்றியும் மலர்களைத் தூவியும் கடலில் பால் ஊற்றியும் மீனவ மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதில் தமிழ்நாடு மீனவர் பேரவைத் தலைவர் இரா.அன்பழகனார், ஜி.ஆர்.வெங்கடேஷ், மீனவர் பேரவைச் செயலர்கள் நாக்ஸ் ஃபெர்னாண்டோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் தமிழ்நாடு மீனவர் பேரவைத் தலைவர் இரா.அன்பழகனார் கூறும்போது, “எங்களுடைய சோகம் இன்னும் தீரவில்லை. உலக வரலாற்றில் வயிற்றுப் பிழைப்புக்காக மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் கொல்லப்படும் நிலை தமிழகத்தில் தான் இருக்கிறது.

“இந்த நிலை மாற வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களின் வாழ்க்கையை மேம்படச் செய்வதற்குத் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்,” என்று கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில், 20 ஆம் ஆண்டு சுனாமி நினைவு நாளையொட்டி, நாகை மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லவில்லை, வேதாரண்யம் அருகே உள்ள 15 கிராம மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல், சுனாமி நினைவு தினம் அனுசரித்தனர்; சுனாமி நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடியில் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.

அதேபோல், கன்னியாகுமரி மாவட்ட கடலோரக் கிராமங்களில் 20ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் வியாழக்கிழமை (டிச. 26) கடைப்பிடிக்கப்பட்டது.

கடலூரில் 20ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி கடற்கரையில் பால் ஊற்றி, மலர்தூவி பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். கடலூர் மாவட்டத்தில் மட்டும் சுனாமி பேரலையில் சிக்கி 610 பேர் உயிரிழந்தனர்.

குறிப்புச் சொற்கள்