புதுச்சேரி: புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஆ.அசோக் ஆனந்த் 8,501 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த பொதுத்தேர்தலில் மங்கலம், தட்டாஞ்சாவடி ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதலமைச்சர் என்.ரங்கசாமி, தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ பதவியிலிருந்து விலகியதை அடுத்து அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆதரவுடன் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் இ.விநாயகம் தோல்வியடைந்தார்; திமுக வேட்பாளர் கு.சேதுசெல்வம் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டார்.
அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் உட்பட மொத்தம் 11 வேட்பாளர்கள் களத்தில் இருந்தபோதிலும், என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளிடையே நான்கு முனைப் போட்டி நிலவியது.
சில மாதங்களுக்கு முன்பு ஆட்சிப் பொறுப்பேற்ற முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அரசு, சந்தித்த முதல் மக்கள் செல்வாக்குச் சோதனையிலேயே வெற்றி பெற்றுத் தன் பலத்தை நிரூபித்துள்ளது.
