புதுவை: அரசு அதிகாரிகள் அடுத்த ஆறு மாதங்களுக்கு வெளிநாடு செல்ல புதுவை அரசு தடை விதித்துள்ளது. எரிபொருள் சிக்கன நடவடிக்கையின் ஓர் அங்கமாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக புதுவை அரசு சார்பு செயலாளர் முருகேசன் அனைத்துத் துறை தலைவர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், அத்தியாவசியமற்ற வெளிநாட்டுப் பயணங்கள், கல்விச்சுற்றுப் பயணங்கள், ஆலோசனைப் பயணங்களை ஆறு மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று சுற்றறிக்கை தெரிவிக்கிறது.
அரசின் அதிகாரபூர்வ வாகனங்களின் பயன்பாடு சிக்கனமாக ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்றும் எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதற்காக வாகனப் பகிர்வு நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசுத் துறைகள், தன்னாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள், பிற அரசு நிறுவனங்களில் அரசின் சொத்துகளை சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்த வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை உடனடியாகப் பின்பற்ற வேண்டும் என்றும் திரு முருகேசன் குறிப்பிட்டுள்ளார்.
“அதிகாரிகளும் பணியாளர்களும் மதிய உணவு நேரத்தில் தங்களது வீடுகளுக்குச் செல்வதைத் தவிர்த்து, அலுவலகத்திற்கு உணவை எடுத்து வந்து சாப்பிடுவது நல்லது.
“துறைகளுக்கு இடையேயான கூட்டங்கள், ஆய்வுக்கூட்டங்கள், ஒருங்கிணைப்புக் கூட்டங்கள் அனைத்தையும் காணொளிக்காட்சி வழியாக நடத்த வேண்டும்,” என்று சுற்றறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

