புதுச்சேரியின் ஐந்தாவது பெண் துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பேற்றுக் கொண்டார் தமிழிசை சௌந்தரராஜன்.
அவருக்கு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நேற்று காலை நடைபெற்ற பதவியேற்புச் சடங்கில், "டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் எனும் நான்..." என தமிழில் உறுதிமொழி எடுத்துக்கொண்டு பதவியேற்றுக்கொண்டார் தமிழிசை.
புதுச்சேரி வரலாற்றில் ஆளுநர் மாளிகையில் இதுபோல் தமிழ் எதிரொலித்தது இதுவே முதல்முறை.
இந்தப் பதவியேற்பு நிகழ்வில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் ரங்கசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். புதுச்சேரி முதல்வர் நாராயண சாமிக்கும் கிரண்பேடிக்கும் இடையே நீண்டநாட்களாக மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், கடந்த செவ்வாயன்று கிரண்பேடி தனது துணைநிலை ஆளுநர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
அவரது பொறுப்பு, தெலுங் கானா ஆளுநராகப் பொறுப்பு வகித்து வரும் தமிழிசையிடம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அதிபர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்தார்.
இந்நிலையில், பதவியேற்றுக் கொண்ட தமிழிசை செய்தியாளர்களிடம் கூறுகையில், "பதவிப் பிரமாணத்தின்போது தமிழில் உறுதிமொழி எடுக்கவேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. துணை நிலை ஆளுநராக இல்லாமல் மக்களுக்கு துணைபுரியும் ஒரு நல்ல ஆளுநராக இருப்பேன்.
"இதனால், புதுச்சேரி மக்கள் பயன்பெறுவார்கள். தெலுங்கானாவுக்கு போன பிறகு தெலுங்கு கற்றுக்கொண்டேன். இங்கு மொழி பிரச்சினையில்லை. என் தாய்த் தமிழை பேசுபவர்கள்தான் இங்கிருக்கிறார்கள். தமிழ் என் பெயரில் மட்டுமில்லை. உயிரிலும் கலந்திருக்கிறது. சட்டத்திற்கு உட்பட்டு என் அரசியல் நகர்வுகள் இருக்கும்," என்று கூறினார்.

