அரசாணையுடன் சரிபார்க்கப்படும் புதுச்சேரி கோயில் நிலங்கள்

அரசாணையுடன் சரிபார்க்கப்படும் புதுச்சேரி கோயில் நிலங்கள்

2 mins read
6ff14487-d29b-4f7e-a883-5b3f101e1e17
புதுச்சேரியின் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள வருவாய், பேரிடர் நிர்வாகத் துறையின் அவசரகால உதவி நிலையத்தைத் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பார்வையிட்டார். - படம்: ஊடகம்

புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த 1974ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணைப்படி கோயில்களிடம் நிலங்கள் உள்ளனவா என்பதை ஆராய்ந்து வருவதாகத் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள வருவாய், பேரிடர் நிர்வாகத் துறையின் அவசர கால உதவி நிலையத்தை அவர் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 15) பார்வையிட்டார்.

செயலாளர் நெடுஞ்செழியன், ஆட்சியர் குலோத்துங்கன் உள்ளிட்டோர் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்துத் துணைநிலை ஆளுநரிடம் விளக்கிக் கூறினர்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திரு கைலாஷ்நாதன், “காரைக்கால் கோயில் நிலமோசடி தொடர்பான வழக்கில் காவல்துறை விசாரணை நடக்கிறது. அரசியல்வாதிகள், அதிகாரிகள் என்ற பாகுபாடின்றி யாருக்கெல்லாம் இதில் தொடர்பு இருக்கிறதோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

இது தொடர்பான விசாரணைப் பொறுப்பை செயலர் நெடுஞ்செழியன் ஏற்றுள்ளார்.

கடந்த 1974ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் இருப்பதுபோல் கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள் சம்பந்தப்பட்ட கோயில்களிடம் இருக்கின்றனவா என்பதை ஆய்வு செய்து வருகிறோம். கோயில் விஷயத்தில் முதலில் கவனம் செலுத்துகிறோம்,’‘ என்று அவர் தெரிவித்தார்.

மழை தொடர்பான நடவடிக்கை

தொடர்ந்து, ‘‘புதுச்சேரி, காரைக்காலில் கனமழை எச்சரிக்கையை அடுத்து அதிகாரிகள் கூட்டம் நடத்தியுள்ளோம். அதன் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பார்வையிட இங்கு வந்துள்ளேன்,” என்றார் திரு கைலாஷ்நாதன்.

அரக்கோணம் தேசியப் பேரிடர் மீட்புப் படையிலிருந்து தலா 30 பேர் கொண்ட மூன்று குழுக்கள் உதவிக்கு வந்துள்ளன. இதில் இரண்டு குழுக்கள் புதுச்சேரிக்குச் செல்லும். ஒரு குழு காரைக்கால் செல்கிறது என்று அவர் கூறினார்.

“பேரிடர் கால அவசர உதவி எண்களை அழைத்தால் அது காவல்துறைக்கு இணைக்கப்படுவதாகவும் அவசர மருத்துவ உதவி வாகனத்துக்கான 108 எனும் எண்ணைத் தொடர்புகொண்டால் தமிழகத்துக்குச் செல்வதாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன்,” என்று துணைநிலை ஆளுநர் கூறினார்.

மீனவர் குடியிருப்புகள் எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் 34,000 கைப்பேசிகளுக்குத் தகவல் தந்துள்ளதாகவும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்
கோயில்விசாரணைஆளுநர்நடவடிக்கைகனமழைகாவல்துறை