புதுச்சேரி: நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 9) ‘புதுச்சேரி மாநில மக்கள் சந்திப்பு’ நிகழ்ச்சியை நடத்தவிருக்கிறது.
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் இறந்துவிட்டனர். அதுகுறித்து மத்தியப் புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், அச்சம்பவம் நிகழ்ந்து கிட்டத்தட்ட இரண்டரை மாதங்களுக்குப் பிறகு மீண்டும் மக்களைச் சந்திக்கவிருக்கிறார் விஜய். காலை 10.30 மணிக்குத் தொடங்கும் புதுச்சேரி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், கியூஆர் குறியீட்டுடன் நுழைவுச்சீட்டு வைத்திருக்கும் 5,000 பேர் மட்டுமே பங்கேற்க காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
புதுச்சேரி நிகழ்ச்சியில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தவெக தொண்டர்களுக்கு அக்கட்சித் தலைமைத்துவம் பல அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
அதில், “கர்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள். உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறுவர், சிறுமியர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் புதுச்சேரி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு அனுமதி இல்லை. அவர்கள் வீட்டில் இருந்தபடியே நேரலையில் நிகழ்ச்சியைக் காணலாம்,” எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், விஜய் நிகழ்ச்சியை முடித்துவிட்டுச் செல்லும்போது அவரது வாகனத்தை இருசக்கர வாகனங்களிலோ வேறு வாகனங்களிலோ பின்தொடரக்கூடாது என்றும் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கக்கூடாது என்றும் தவெக தொண்டர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
“உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, தேசிய நெடுஞ்சாலைகள், பிற சாலைகளின் இருபுறங்களிலும் பதாகைகளோ அலங்கார வளைவுகளோ கொடி கட்டப்பட்ட கம்பிகளோ உரிய அனுமதி பெறாமல் வைக்கக்கூடாது.
“மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், மரங்கள், வாகனங்கள், கொடிக் கம்பங்கள் ஆகியவற்றின் மீது ஏறக் கூடாது. மின்கம்பங்களுக்கும் மின்மாற்றிகளுக்கும் அருகில் செல்லக்கூடாது,” என்பன உள்ளிட்ட வேறு பல அறிவுறுத்தல்களையும் தவெக தலைமை வெளியிட்டுள்ளது.

